கோலார், : ”கர்நாடக மாநில பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு 2,000 ரூபாய் வீதம், 620 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியது. இதில், 75 சதவீதம் மத்திய அரசும், 25 சதவீதம் மாநில அரசும் வழங்குகிறது.
ஆனால், மாநில அரசின் விளம்பரத்துக்காக 200 கோடி ரூபாய் செலவிடுகிறது,” என, ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி கேள்வி எழுப்பினார்.
கோலாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட போவதில்லை என்று நிகில் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளார்.
அப்படி இருந்தும், அதே கேள்விக்கு எத்தனை முறை அவர் பதில் சொல்ல வேண்டும். மாண்டியாவில் போட்டியிடுவது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
இத்தொகுதி எம்.பி., பெரியவர். அவர்களை பற்றி நான் என்ன சொல்ல முடியும்? நாங்கள் சிறிய கட்சி. நான் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன். ஆனால் கட்சித் தொண்டர்கள், என்னை போட்டியிடுமாறு அழுத்தம் கொடுக்கின்றனர். மாண்டியாவில் போட்டியிடுவது குறித்து தேர்தல் நெருங்கும்போது பார்க்கலாம்.
கோலாரில், முல்பாகல் ம.ஜ.த., – எம்.எல்.ஏ., மஞ்சுநாத் பெயரும் அடிபடுகிறது. இம்முறை கோலார் தொகுதியில் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார். தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வேண்டும்.
தற்போதைய எம்.பி., முனிசாமியும் திறமையானவர் தான். அவரும் இறுதிப்பட்டியலில் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி யாருடைய பெயரை சொல்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
மோசமான அரசு
இவ்வளவு மோசமான அரசை நான் பார்த்ததில்லை. காங்கிரசின் மோசமான ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
பயிரை இழந்த விவசாயிகள் நஷ்டத்தில் உள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. ஆனால், விவசாயிகளுக்கு தலா 2,000 கோடி ரூபாய் என 620 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இதில், 75 சதவீதம் மத்திய அரசும், 25 சதவீதம் மாநில அரசும் வழங்குகிறது.
ஆனால், விளம்பர நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில், 200 கோடி ரூபாய் செலவிடுகின்றனர். விளம்பரத்தில் வரும் கலர் போட்டோவை பார்த்தால் கேவலமாகிவிடும்
கிரஹலட்சுமி திட்டத்தில் 2,000 ரூபாய்க்கு மேல் கொடுத்தாலும் ஆட்சேபனை இல்லை. வாக்குறுதி என்று அறிவித்து, மாநில கருவூலத்தை காலி செய்கின்றனர். யாருடைய பணத்தில் அரசு விளம்பரம் செய்கிறது.
ம.ஜ.த., – எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசுக்கு சென்றால், ஏன் கவலைப்பட வேண்டும். அவர்களுக்கு பணமோ, மிரட்டல் விடுத்தோ சிவகுமார் அழைக்கிறாரா?
சீனாவில் இருந்து வாங்கி குக்கர், டைனிங் செட்களை வினியோகம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் 55 ஆண்டுகளாக வாக்காளர்களை, இந்த நிலையில் தான் வைத்துள்ளது.
கொள்ளை அடித்த பணத்தில் பரிசுப் பொருட்கள் வழங்குகின்றனர். நீங்கள் உங்கள் பணியை சரியாக செய்திருந்தால், ஏன் பரிசு பொருட்கள் கொடுக்கிறீர்கள்?
நல்ல பணி செய்து ஆட்சியை பிடிக்கவில்லை. இலவசம் தருவதாக கூறி, ஆட்சிக்கு வந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்