மதச்சார்பற்ற இந்தியாவில் இந்து – முஸ்லிம் வெறுப்பு இன்றும் முழுமையாக நீங்கா ஒன்றாகவே இருக்கிறது. மிக சமீபத்தில் பார்த்தால், இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தின் இறைத் தூதராகப் போற்றும் முகமது நபிக்கு எதிராக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் சர்ச்சைக் கருத்து தெரிவித்தது, ராம நவமி, அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் ஏற்பட்ட கலவரம், ஆக்கிரமிப்பு என டெல்லி, உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்களின் வீடுகள் தகர்க்கப்பட்டது, அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டபோது மகாராஷ்டிராவில் காவிக் கொடி ஏந்தியவர்கள் இஸ்லாமியர்கள்மீது தாக்குதல் நடத்தியது எனக் கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் பலவற்றைக் கூறலாம்.
இன்னொருபக்கம், ஆர்.எஸ்.எஸ் போன்ற வலதுசாரி அமைப்புகள், `முகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் இந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர், இஸ்லாமிய மன்னர்கள் இந்துக் கோயில்களைத் தகர்த்துவிட்டு மசூதிகளை எழுப்பினர்’ என வரலாற்றுக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முன்வைத்துவருகின்றன.
அதில், அயோத்தியில் 500 ஆண்டுகளாக இருந்த பாபர் மசூதி, ராமர் பிறந்த இடம் எனத் தகர்க்கப்பட்டு, அதே பகுதியில் கடந்த ஜனவரியில் பிரதமர் மோடியால் ராமர் கோயில் திறக்கப்பட்டது. அதேபோல், ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபடலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அந்த வரிசையில், மதுராவில் மசூதி இருக்கும் இடத்தை `கிருஷ்ண ஜென்மபூமி’ என பா.ஜ.க உட்பட வலதுசாரியினர் உரிமை கோரிவருகின்றனர்.
இந்த நிலையில், `இந்தியா ஹேட் லேப் (India Hate Lab)’ எனும் ஆய்வுக் குழு, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நடைபெறும் இந்தியாவில் 2023-ல் 75 சதவிகித வெறுப்பு பேச்சு சம்பவங்கள் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நடந்திருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அமெரிக்காவின் வாஷிங்டன்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தக் குழு, `மதம், இனம், தேசியம், அல்லது பாலினம் உள்ளிட்ட பண்புகளின் அடிப்படையில் ஒரு தனிநபர் அல்லது குழுவுக்கு எதிரான பாரபட்சமான செயல்’ என வெறுப்பு பேச்சுக்கு ஐக்கிய நாடுகள் சபை வைத்திருக்கும் வரையறைகள் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறது.
அதன்படி, `இந்தியாவில் வெறுப்பு பேச்சு நிகழ்வுகள்’ என்ற தலைப்பில் இந்தக் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில், 2023-ல் இஸ்லாமியர்களுக்கு எதிராக நாட்டில் 18 மாநிலங்கள் மற்றும் மூன்று கூட்டாட்சி ஆளுகைப் யூனியன் பிரதேசங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக மொத்தம் 668 வெறுப்பு பேச்சு சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில், பா.ஜ.க ஆட்சி ஆட்சி நடைபெறும் மூன்று முக்கிய மற்றும் பெரிய மாநிலங்களான மகாராஷ்டிரா 118 வெறுப்புப் பேச்சு சம்பவங்களுடன் முதலிடத்திலும், உத்தரப்பிரதேசம் 104 சம்பவங்களுடன் இரண்டாவது இடத்திலும், மத்தியப் பிரதேசம் 65 சம்பவங்களுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. இந்த மாநிலங்களில் பதிவாகியிருக்கும் 287 சம்பவங்கள், மொத்தம் பதிவான 668 சம்பவங்களில் 43 சதவிகிதம்.
அதேபோல், பா.ஜ.க ஆளும் சிறிய மாநிலங்களான ஹரியானாவில் 48 சம்பவங்கள், உத்தரகாண்டில் 41 சம்பவங்கள் என இரண்டும் சேர்த்து 13.2 சதவிகித சம்பவங்கள் நடந்திருக்கின்றன. மற்றபடி, ராஜஸ்தான் 64, கர்நாடகா 40, குஜராத் 31, சத்தீஸ்கர் 21, பீகார் 18 வெறுப்புப் பேச்சு சம்பவங்களுடன் இருக்கின்றன. இந்த முதல் 10 இடங்களில் இருக்கும் மாநிலங்களில் கர்நாடகாவில் மே மாதம் காங்கிரஸும், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் டிசம்பர் மாதம் பா.ஜ.க-வும் ஆட்சிக்கு வந்தது. மொத்தமாக, 498 சம்பவங்கள் அதாவது 75 சதவிகித சம்பவங்கள் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நிகழ்ந்திருக்கிறது.
மேலும், இந்த 668 சம்பவங்களில், 43 சதவிகித சம்பவங்கள் ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் நடந்திருக்கின்றன. இதில், நவம்பரில் 5 மாநிலத் தேர்தல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, மொத்த வெறுப்புப் பேச்சு சம்பவங்களில் மூன்றில் ஒரு பங்கு, தீவிர வலதுசாரி அமைப்புகளான விஷ்வ இந்து பரிஷத் (VHP) மற்றும் பஜ்ரங் தள் ஆகியவற்றால் அரங்கேறியிருப்பதாக ஆய்வுக்குழு அறிக்கை கூறுகிறது.
அதேபோல், இந்த 668 சம்பவங்களில் 63 சதவிகிதம், லவ் ஜிஹாத் (இஸ்லாமிய ஆண்கள், கட்டாய மதமாற்ற நோக்கில் இந்து பெண்களைத் திருமணம் செய்தல்), நில ஜிஹாத் (பொது இடங்களை இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்தல்), மக்கள்தொகை ஜிஹாத் (இஸ்லாமியர்கள் அதிகம் கருவுறுதல்) போன்ற இஸ்லாமிய வெறுப்பு அஜெண்டாவாக இருக்கிறது என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.