இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7 ஆம் தேதி தர்மசாலாவில் நடக்கிறது. இப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருக்கும் ரஜத் படிதார் நீக்கப்பட இருக்கிறார். இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமான அவர் மொத்தம் 6 இன்னிங்ஸில் பேட்டிங் விளையாடி வெறும் 63 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இதனால் அவர் மீது அதிருப்தி கொண்ட கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் வேறொரு பிளேயருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என முடிவெடுத்துள்ளனர்.
30 வயதாகும் ரஜத் படிதார் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கிடைத்த பொன்னான இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் தொடர்ச்சியாக வீண்டித்தார். 6 இன்னிங்கஸ்களில் ஏதாவதொரு இன்னிங்ஸிலாவது சதமடித்திருந்தால் இந்திய அணயில் தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கலாம். ஆனால் இஷ்டத்துக்கு விளையாடுவது போல் வருவதும்போவதுமாக இருந்து விட்டார் அவர்.
அவரைப் போலவே இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமான சர்பிராஸ்கான் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டனர். இருவரும் அரைசதம் அடித்து தங்களது திறமையை நிரூபித்ததால் இந்திய அணியில் தங்களுக்கான இடத்தையும் உறுதி செய்து கொண்டுள்ளனர். இந்திய அணியில் இப்போது ராகுல், விராட் கோலி ஆகியோர் இல்லாத காரணத்தால் தான் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர்கள் அணிக்கு திரும்பினால் இவர்களுக்கான இடம் இப்போதும் கேள்விக்குறி தான். இருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளில் இவர்களின் பெயரை பரிசீலிக்கும் இடத்திலாவது இருக்கிறார்கள்.
ஆனால் அந்த வாய்ப்பு என்பது ரஜத் படிதாருக்கு இனி கிடைக்காது. அவர் இந்தமுறை இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டால் மீண்டும் ஒருமுறை இந்திய அணியில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு அரிதினும் அரிதுதான். இப்போது அவருக்கான இடத்தில் தேவ்தத் படிக்கல் இடம்பெற இருக்கிறார். அவருக்கு வாய்ப்பு கொடுக்க இந்திய அணி தயாராகவே இருக்கிறது. ஒருவேளை தேவ்தத் படிக்கல் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்பட்சத்தில் ரஜத் படிதாரின் இந்திய அணிக்கான சர்வதேச கிரிக்கெட் பயணம் ராஞ்சி டெஸ்ட் போட்டியோடு முடிவுக்கு வரவும் வாய்ப்பு இருக்கிறது.