Man arrested for killing old woman and cutting her into five pieces for refusing to give loan | கடன் கொடுக்க மறுத்ததால் மூதாட்டியை கொன்று ஐந்து துண்டுகளாக்கியவர் கைது

கே.ஆர்.புரம் : கடனை அடைப்பதற்காக, மூதாட்டியைக் கொன்று துண்டு துண்டாக வெட்டி டிரம்மில் அடைத்தவர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு, கே.ஆர்., புரம் நிசார்கா லே – அவுட்டில் சாலையோரம் இருந்த, டிரம்மில் இருந்து நேற்று பயங்கர துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த வழியாக சென்ற சிலர், டிரம்மை திறந்து பார்த்தனர்.

அப்போது துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், மூதாட்டி உடல் அழுகிய நிலையில் இருந்தது. அதிர்ச்சியடைந்தவர்கள் கே.ஆர்., புரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடலை மீட்ட போலீசார், விசாரணை நடத்தினர். இறந்தவர் சுசீலம்மா, 70, என்பது தெரியவந்தது. சிக்கபல்லாபூரை சேர்ந்த இவர், பத்து ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு நிசார்கா லே – அவுட்டில் லீசுக்கு எடுத்த வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் நபர் ஒருவர் சுற்றுவதை போலீசார் கண்டுபிடித்தனர்.

அவரை பிடித்து விசாரித்தபோது, மூதாட்டியை கொன்ற உண்மையை ஒப்புக் கொண்டார்.

விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

சுசீலம்மாவின் பக்கத்து வீட்டில், தினேஷ், 40, என்பவர், மனைவி, மகளுடன் வசித்து வருகிறார். கப்பலில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, பணியை விட்டு விலகியதால், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

ஏற்கனவே வாங்கிய 30 லட்சம் ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கே வந்து கேட்க துவங்கினர்.

இதற்கிடையில், அண்டை வீட்டை சேர்ந்த சுசீலம்மா, தனது சொத்தை விற்றதை அறிந்தார். தனக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து அவரிடம் தெரிவித்து, கடன் கேட்டுள்ளார். அதற்கு மூதாட்டி மறுத்துவிட்டார்.

வீட்டில் யாரும் இல்லாததால், மூதாட்டியின் கழுத்தை நெரித்து, கை, கால்களை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

கொலை செய்த பின், மூதாட்டியிடம் இருந்த தங்க நகைகளை எடுத்துக் கொண்டு, நகை அடகு கடைக்கு சென்று பார்த்தபோது, காதணியை தவிர, மற்ற அனைத்து நகைகளும் கவரிங் என்பது தெரியவந்தது.

கிடைத்த பணத்தில் பிளாஸ்டிக் டிரம்மை வாங்கிய அவர், உடல் பாகங்களை அதில் அடைத்து வைத்துள்ளார்.

இவ்வாறு விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இன்று, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.