பெங்களூரு : மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜா வெங்கடப்பாவுக்கு, சட்டசபை, சட்ட மேலவையில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டி, நேற்று காலை சட்டசபை கூடியது. அப்போது, நேற்று சுர்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜா வெங்கடப்பா நாயக் மறைவை ஒட்டி, சபாநாயகர் காதர் இரங்கல் தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது தலைவர்கள் பேசியதாவது:
சபாநாயகர் காதர்: சுர்பூர் எம்.எல்.ஏ., மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது. 1957 நவ., 23ல் யாத்கிர் மாவட்டம் சுர்பூரில் ராஜா வெங்கடப்பா நாயக் பிறந்தார். நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.
முதல்வர் சித்தராமையா:
மிகவும் எளிசையான அரசியல்வாதி. தொகுதியில் மக்கள் செல்வாக்கு பெற்றவர். காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மிகவும் நெருங்கிய நண்பர். அவரது இறப்பு, காங்கிரசுக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு. அவர் சுர்பூர் மன்னர் வம்சத்தை சேர்ந்தவர். அவரது தந்தை எம்.எல்.ஏ.,வாகவும், சகோதரர் எம்.பி.,யாகவும் பதவி வகித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் அசோக்: கடவுள் என்ன எழுதி வைத்திருக்கிறாரோ, அது தான் நடக்கும். யாரும் இங்கு நிரந்தரம் இல்லை. ஒரு சர்ச்சையிலும் சிக்காத தலைவர். தானும், தன்னுடைய பணியும் என்று இருந்தவர். மக்கள் சேவையே மூச்சாக கருதியவர்.
துணை முதல்வர்சிவகுமார்: பெரிய மன்னர் வம்சத்தை சேர்ந்தவரானாலும், அப்படி நடந்து கொண்டது இல்லை. நான்கு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சென்று பார்த்தபோது, ‘ராஜ்யசபா தேர்தலின்போது கண்டிப்பாக வந்து ஓட்டுப்போடுவேன்’ என்றார்.
இதுபோன்று அனைத்து கட்சிகளின் பல்வேறு உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்து பேசினர். இறுதியில், ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இது போன்று, சட்ட மேலவையிலும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின், இரண்டு அவைகளும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சொந்த ஊரில் இறுதி அஞ்சலி
பெங்களூரில் காலமான ராஜா வெங்கடப்பா நாயக் உடல், அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, சகல அரசு மரியாதையுடன், போலீசாரின் 21 குண்டுகள் முழங்க இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. முதல்வர் சித்தராமையா, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட அமைச்சர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்