ப்ரோ கபடி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. தபாங் டெல்லி மற்றும் பாட்னா பைரேட்ஸுக்கிடையான பிளே-ஆப் போட்டி தொடக்கத்திலிருந்தே விறுவிறுப்பாகச் சென்றிருந்தது.
முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன. இரண்டாம் பாதியில் முதல் 19 நிமிடங்களில் கச்சிதமாக தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்திய தபாங் டெல்லி அணி 31-29 என முன்னிலையில் இருக்க, போட்டியின் கடைசி நிமிடத்தில் டூ-ஆர்-டை ரெய்டுக்குச் சென்ற டெல்லியின் மீத்து மஹேந்தர் போனஸ் புள்ளி எடுக்க முயற்சி செய்யும்போது அவரைக் கச்சிதமாக மடக்கிப் பிடித்தார் பாட்னாவின் கிரிஷன் துல்.
பின் ரெய்டுக்குச், சென்ற சச்சின் அசால்டாக புள்ளிகளை எடுக்க 36 நொடிகளே மீதமிருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது டெல்லி அணி.
கடைசி 3 நொடிகளே மிச்சம் இருந்த நிலையில் ரெய்டுக்கு வந்த மஞ்சித் தன் விரல்களால் தபாங் டெல்லியின் விஷால் பரத்வாஜின் முகத்தில் தொட்டு விட்டுத் திரும்பி கோட்டில் காலடி எடுத்து வைக்க, ப்ளே ஆஃப் போட்டியை வென்று கச்சிதமாக அரை இறுதியில் காலடி எடுத்து வைத்தது பாட்னா பைரேட்ஸ் அணி. இப்போட்டியில் டெல்லி அணி தோற்றிருந்தாலும் அந்த அணியின் சார்பில் தனி ஒரு வீரனாக ஆஷு மாலிக் 17 புள்ளிகளை எடுத்திருந்தார்.
அடுத்ததாக ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸுக்கு இடையான இரண்டாம் ப்ளே ஆப் போட்டி தொடங்கியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி முதல் பாதியின் முடிவில் 21-16 என முன்னிலையில் இருந்தது. பின் இரண்டாம் பாதியில் ருத்ரதாண்டவம் ஆட ஆரம்பித்த ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி பாயிண்ட் டிப்ரென்ஸ்க்கு ஆடுவது போல் புள்ளிகளை எடுக்க 42-25 என சுலபமாக இப்போட்டியை தன்வசப்படுத்தியது ஹரியானா.
ஷிவம், வினய்யுக்கு ரெய்டிலும் மோகித்துக்கு டிபன்சிலும் கை கொடுக்க இம்மூவேந்தர் கூட்டணி ஹரியானா ஸ்டீல்ர்ஸை அரை இறுதிக்கு அழைத்துச் சென்றிருந்தது.
அடுத்ததாக பிப்ரவரி 28-ம் தேதி நடக்கவிருக்கும் முதல் அரையிறுதி போட்டியில் புனேரி பல்தான்ஸுக்கு எதிராக பாட்னா பைரேட்ஸ் அணி மோத இருக்கிறது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸுக்கு எதிராக ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி மோத இருக்கிறது.