மைசூரு : ”இக்கட்டான சூழ்நிலையில் மாநிலத் தலைவர்களுடன் மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சிக்காக உழைத்துள்ளேன்.
சாம்ராஜ் நகர் தொகுதியில் மகள், மருமகள் என்ற முறையில் சீட் கேட்டுள்ளேன். கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,” என, கர்நாடக மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி புஷ்பா தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சட்டசபை தேர்தலின்போது, சக்லேஸ்பூர் சீட்டுக்கு ஆசைப்பட்டேன். மாறிவிட்ட அரசியல் சூழ்நிலையில், எனக்கு சீட் கிடைக்கவில்லை. ஆனாலும் கட்சிக்கு எதிராக செயல்படவில்லை.
கட்சி யாருக்கு சீட் கொடுத்தாலும் வெற்றி மட்டுமே எங்களுக்கு அளவுகோல். சாம்ராஜ் நகர் தொகுதியில் இம்முறை காங்கிரசுக்கு நல்ல சூழல் உள்ளது. எங்களால் முடிந்ததை செய்வோம்.
தற்போதைய சூழ்நிலையில் பெண்களின் நன்மைகள் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
பெண்களுக்கு, காங்கிரஸ் அளித்த வாக்குறுதி பணத்தை பா.ஜ., விமர்சிக்கிறது.
காங்கிரசின் வாக்குறுதித் திட்டங்கள், மக்கள் கையில் உள்ளது. மாநிலத்தில் நிலவும் வறட்சி நிலையை கண்டுகொள்ளாமல், விவசாயிகளின் நலனை பார்க்காமல் மத்திய அரசு அநீதி இழைத்து உள்ளது.
பத்து ஆண்டு காலத்தில் பிரதமர் மோடி செய்த ஒரு வளர்ச்சியை குறிப்பிடுங்கள். ராமர் கோவில் கட்டுவது தான் சாதனை. கடந்த முறை புல்வாமா தாக்குதல் விவகாரத்தை வைத்து வெற்றி பெற்றார். இம்முறை ராமர் கோவில் பிரச்னையை வைத்து அரசியல் செய்கின்றனர். இது போன்ற உணர்வுப்பூர்வமான பிரச்னைகளை வைத்து அரசியல் செய்வது பா.ஜ., மட்டுமே.
பத்து ஆண்டுகளில் நாட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சி மிகவும் மோசமான நிலையை எட்டி உள்ளது. பெட்ரோல், டீசல், அரிசி, பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.
விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும் என்று நாட்டு பெண்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். சாமானிய பெண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கானாவிட்டால், வரும் நாட்களில் பெண்கள், அவர்களுக்கு பாடம் புகட்டுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்