டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனைக்கு 26 வயதுடைய நபர் ஒருவர் வந்திருக்கிறார். இவர் 20 நாள்களுக்கும் மேலாகத் தீராத வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டுள்ளார். அவரால் எதையும் உண்ணவும் இயலவில்லை. இவரை மூத்த மருத்துவர் தருண் மிட்டல் பரிசோதனை செய்தார்.
அந்நபரின் உறவினர்கள் கடந்த சில வாரங்களாக அவர் நாணயங்கள் மற்றும் காந்தங்களைச் சாப்பிட்டதையும், மனநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சையில் இருப்பதையும் கூறியுள்ளனர்.
அவர்கள் வைத்திருந்த எக்ஸ்ரேவில் அவரது வயிற்றில் நாணயங்கள் மற்றும் காந்தங்கள் இருப்பது தெரிந்தது. உட்கொள்ளப்பட்ட காந்தங்கள் மற்றும் நாணயங்கள் குடலில் அடைப்பை ஏற்படுத்தி இருப்பது சிடி ஸ்கேனில் தெரிந்தது.
உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையில் சிறுகுடலின் இரண்டு வெவ்வேறு இடங்களில் (Loop) நாணயங்கள் மற்றும் காந்தங்கள் இருந்தன. காந்தத்தின் ஈர்ப்பு தன்மை காரணமாக இரண்டு குடல்களும் ஒன்றோடு ஒன்று ஒட்டி அரித்து இருந்தன. வெற்றிகரமாக குடலில் இருந்த அனைத்து நாணயங்களும் காந்தங்களும் நீக்கப்பட்டு, குடல்கள் இணைக்கப்பட்டன.
மருத்துவர்கள் அவரது வயிற்றில் இருந்து 1, 2, 5 ரூபாய் காசு என மொத்தம் 39 நாணயங்களையும், இதயம், நட்சத்திரம், புல்லட் மற்றும் முக்கோண வடிவிலான 37 காந்தங்களையும் நீக்கியதாகக் கூறியுள்ளனர். ஆரோக்கியமான நிலையில் ஏழு நாள்களுக்கு பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இது குறித்து அந்த நபர் கூறுகையில், “உடலைக் கட்டமைக்க ஜிங்க் உதவுகிறது என்று கருதியதால் நாணயங்களையும் காந்தங்களையும் உட்கொண்டேன். நாணயங்களில் ஜிங்க் உள்ளது. காந்தங்கள் நாணயங்களை குடலிலேயே தங்க வைப்பதால், உடலில் ஜிங்க் உறிஞ்சப்படுவதற்கு வசதியாக இருக்கும் என்று நம்பினேன்’’ என்று கூறியுள்ளார்.
Zinc சாப்பிட்டால் பாடி பில்டிங்கிற்கு உதவும் என இளைஞர் செய்த காரியம் பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.