ஒருபக்கம் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும், இன்னொரு பக்கம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை கிண்டலடித்தும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசியிருக்கிறார்.
ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் நடந்த ரத்த தான முகாமினை, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
அந்நிகழ்ச்சியில் பேசியவர், “ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தேர்தல் தேதி அறிவிக்கும் வரை இதுபோல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும்.
தி.மு.க எம்.பி-க்கள் 38 பேர் இருந்தும், தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் விட்டு கொடுத்துள்ளனர். அதனால் அவர்களை மக்கள் இந்த தேர்தலில் புறக்கணிப்பார்கள். ஸ்டாலின் குரல் என்று பிரசாரம் செய்பவர்கள், ஏன் தமிழக உரிமைகளுக்காக பேச மறுக்கிறார்கள்?
பல்லடத்தில் பேசிய பாரதப் பிரதமர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தியாகத்தை எடுத்துச் சொல்லி பாராட்டியுள்ளார். தமிழகத்தில் எத்தனை தலைவர்கள் வாழ்ந்திருந்தாலும், இந்த இரு பெரும் தலைவர்களுக்கு கிடைக்கும் பாராட்டுகள் போல் வராது. இந்தப் பெருமை, எடப்பாடி பழனிசாமியையும், அ.தி.மு.க தொண்டர்களையுமே சேரும்.
தியாகத்தின் மறுவடிவமான அன்னை தெரசாவே ஜெயலலிதாவின் தொட்டில் குழந்தை திட்டத்தை நேரில் சென்று பாராட்டினார். தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டபோது மின்னல் வேகத்தில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று அமெரிக்க அதிபர் பாராட்டினார்.
அதே போன்று ஹிலாரி கிளின்ட்னே தமிழகத்திற்கு வந்து ஜெயலலிதாவை பாராட்டினார். அது மட்டுமல்ல, உலக நாடுகளெல்லாம் விருதுகளை வழங்கின. தங்கத்தாரகை விருதும் வழங்கப்பட்டது. அதனால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகழைச் சொல்வது ஆச்சர்யம் ஏதுமில்லை.
பாரதப் பிரதமரின் பாராட்டு இரு பெரும் தலைவர்களின் வாரிசாக உள்ள எடப்பாடியாரையும் சாரும். இது என் தனிப்பட்ட கருத்து.
இன்றைக்கு குலசேகரபட்டனத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக 2,223 ஏக்கர் நிலத்தை எடப்பாடி பழனிசாமி பெற்று கொடுத்தார், அதற்காக நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேநேரம், கப்பு வாங்கி விட்டோம் என்று அண்ணாமலை சொல்கிறார். கப்பு மேடையில் வாங்கினதா… கடையில் வாங்கினதா என்ற விவாதம் நடைபெறுகிறது. மேடையில் கப்பு வாங்கினால்தான் தமிழக மக்கள் பாராட்டுவார்கள். கடையில் கப்பு வாங்கினால் கௌரவம் இருக்காது” என்றார்.