இம்பால்: மணிப்பூரின் கிழக்கு இம்பால் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கமாண்டோ போலீஸின் ஒரு பிரிவினர் ஆயுதம் துறந்து அடையாளப் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து சமூகவலைதளத்தில் வைரலாகும் வீடியோவில், கமாண்டோ படையின் ஒரு பிரிவினர் தங்களின் வளாகத்தில் ஆயுதங்களை கீழே வைப்பது தெரிகிறது. ஆயுதம் தாங்கிய போராட்டக்காரர்களை கையாளுவதில் மாநில அரசு தங்களுக்கு போதிய சுதந்திரம் வழங்கவில்லை என்று அவர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக, காவல் துறை அதிகாரி கடத்தல் குறித்து மணிப்பூர் காவல் துறையினர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “இம்பால் கிழக்கு பகுதியின் கூடுதல் காவல் கண்காணிப்பாளரான அமித் சிங், ஆயுதமேந்திய கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டார். பின்னர், பாதுகாப்பு படையினரின் துரித நடவடிக்கையால் பின்னர் மீட்கப்பட்டார். மணிப்பூர் காவல் துறையின் செயல்பாட்டு பிரிவில் நியமிக்கப்பட்ட அமித் சிங்கின் வீட்டில் செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு ஆரம்பை தென்க்கோல் என்ற அமைப்பினைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
வாகனங்களில் வந்த 200 பேர் அமித் சிங்கின் வீட்டில் நடத்திய இந்தத் தாக்குதலில் நான்கு வாகனங்கள் சேதமாகின. மீட்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரி அமித் சிங் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வசிப்பிடங்கள், வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.