மும்பை,
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் முன்னணி வீரரான கே.எல்.ராகுல் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய ராகுல் காயம் காரணமாக அதன் பின்னர் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை. 4வது டெஸ்ட் போட்டியில் ராகுல் ஆடுவார் என தகவல் வெளியான நிலையில் கடைசி நேரத்தில் அவர் இடம் பெறமாட்டார் என பி.சி.சி.ஐ அறிவித்திருந்தது.
இந்நிலையில் ராகுலுக்கு ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை செய்ய அவரை லண்டனுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அவர் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகிறது.