இந்தியாவில் உள்ள குடும்பங்களின் மாதாந்திர செலவு என்ன என்பது குறித்த தரவுகளை தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (National Sample Survey Office) வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இது குறித்த ஆய்வு 2011 – 12ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 11 வருடங்கள் கழித்து ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023-க்கு இடைப்பட்ட காலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்தியாவில் உள்ள குடும்பங்கள் எந்த உணவுகளை அதிகம் உட்கொள்கிறார்கள் மற்றும் எதற்காக அதிகம் செலவிடுகிறார்கள் என்பது போன்ற கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டது.
கணக்கெடுப்பில் 2,61,746 குடும்பங்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கிராமப்புறங்களில் 15,5014 குடும்பங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் 1,06,732 குடும்பங்களில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. 2011-12ம் ஆண்டின் கணக்கெடுப்பில் 347 பொருட்கள் (Items) பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. சமீபத்திய ஆய்வில், 405 பொருட்கள் பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டது.
உணவும் செலவும்….
*மாதாந்திர சராசரி தனிநபர் நுகர்வோர் செலவை (MPCE) எடுத்துக் கொண்டால், கிராமப்புறங்களில் சராசரியாக 3,773 ரூபாய் செலவிடுகிறார்கள். இதில் உணவிற்கு 1,750 ரூபாய், உணவு அல்லாத பொருட்களுக்கு 2,023 ரூபாய் செலவு செய்கிறார்கள்.
*அதுவே நகர்ப்புறங்களில் சராசரியாக 6,459 ரூபாய் செலவிடுகிறார்கள். இதில் உணவுக்கு 2,530 ரூபாயும், உணவு அல்லாத பொருட்களுக்கு 3,929 ரூபாயும் செலவிடுகிறார்கள்.
*உணவுப் பொருட்களுக்காகக் கிராமப்புற வீடுகளில் 46 சதவிகிதமும், நகர்ப்புற வீடுகளில் 39 சதவிகிதமும் செலவிடப்படுகிறது.
*உணவு அல்லாத பொருள்களில் மருத்துவ சிகிச்சை, கல்வி, போக்குவரத்து, நுகர்வோர் சேவைகள், பொழுதுபோக்கு, வாடகை, உடை மற்றும் படுக்கை, பொருள்கள், ஃபுட்வியர் மற்றும் புகையிலை ஆகியவை அடங்கும்.
அடிமட்டத்திற்கும், உயர்மட்டத்திற்குமான இடைவெளி
*இந்திய மக்கள்தொகையில் அடிமட்டத்தில் உள்ள ஐந்து சதவிகிதத்தினரின் சராசரி மாதாந்திர தனிநபர் நுகர்வோர் செலவு, கிராமங்களில் 1,441 ரூபாயாகவும், நகர்ப்புறங்களில் 2,087 ரூபாயாகவும் உள்ளது. அதுவே தினசரி செலவு கிராமப்புறங்களில் 48 ரூபாயாகவும், நகர்ப்புறங்களில் 69.5 ரூபாயாகவும் உள்ளது.
*இந்தியாவின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள ஐந்து சதவிகிதத்தினரின் சராசரி மாதாந்திர தனிநபர் நுகர்வோர் செலவு, கிராமங்களில் 10,501 ரூபாயாகவும், நகர்ப்புறங்களில் 20,824 ரூபாயாகவும் உள்ளது. கிராமப்புற குடும்பங்களில் தினசரி சராசரி செலவு 352.7 ரூபாய் மற்றும் நகர்ப்புற குடும்பங்களில் 694.8 ரூபாயாகும்.
*நகர்ப்புற இந்தியக் குடும்பங்களில் உள்ள பணக்காரர்களான ஐந்து சதவிகிதத்தினர், உணவு, குழந்தைகளின் கல்வி, மருத்துவம், போக்குவரத்து மற்றும் உடை போன்ற பிற தேவைகளுக்காக கீழ்மட்டத்தில் உள்ள ஐந்து சதவிகித ஏழைகள் செலவிடுவதை விட10 மடங்கு அதிகமாகச் செலவிடுகிறார்கள்.
*நகர்ப்புற மற்றும் கிராமப்புற குடும்பங்களின் வருமான அளவுகள் கடந்த கணக்கெடுப்பை விட உயர்ந்துள்ளது. கிராமப்புற குடும்பங்கள் செலவு செய்வதில் வளர்ச்சியடைந்துள்ளன. இருந்தபோதும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதையும் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
உங்கள் வீட்டுச் செலவு அதிகரித்துள்ளது என்று நினைக்கிறீர்களா?! அப்படியெனில் எதற்காக அதிகம் செலவிட நேருகிறது, கமென்டில் சொல்லுங்கள்!