சிம்லா,
இமாசல பிரதேச சட்டசபை இன்று கூடியபோது, எதிர்க்கட்சியாக உள்ள பா.ஜ.க. உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமரும்படி சபாநாயகர் கூறினார். ஆனால், அவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில், கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதுடன், சபாநாயகர் அறையில் தவறாக நடந்து கொண்டதற்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 15 பேரை சஸ்பெண்டு செய்து சபாநாயகர் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளார். அவர்கள் அவையில் இருந்தும் வெளியேற்றப்பட்டனர்.
இதன்படி, எதிர்க்கட்சி தலைவர் ஜெய்ராம் தாகூர், விபின் சிங் பார்மர், ரந்தீர் சர்மா, லோகேந்தர் குமார், வினோத் குமார், ஹன்ஸ் ராஜ், ஜனக் ராஜ், பல்பீர் வர்மா, திரிலோக் ஜம்வால், சுரேந்தர் ஷோரி, தீப் ராஜ், பூரன் தாக்கூர், திலீப் தாக்குர் மற்றும் இந்தர் சிங் காந்தி ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இதேபோன்று, மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் பொது பணி துறை மந்திரியான விக்ரமாதித்யா சிங் ராஜினாமா செய்துள்ளார். இதனால், அரசியல் ஸ்திரமற்ற சூழலை இமாசல பிரதேசம் எதிர்கொண்டு உள்ளது. முதல்-மந்திரிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு கோர கூடிய சூழலில், 15 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நேற்று கட்சி மாறி வாக்களித்த சூழலில், ராஜ்யசபை சீட் ஒன்று பா.ஜ.க.வின் வசம் சென்றது. இந்த சூழலில், இமாசல பிரதேச அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டு, பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.