சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், 2012 – 2016-ல் முதல்வராக இருந்தபோது, தேசிய பசுமை தீர்ப்பாயம், சுரங்கம் தோண்டுவதற்குத் தடை விதித்திருந்தும், பொதுப்பணித்துறையினர், சட்டவிரோதமாகச் சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதித்ததாகவும், சட்டவிரோதமாக உரிமங்களைப் புதுப்பித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், அப்போதைய முதல்வர் அகிலேஷ் யாதவ் அலுவலகம், ஒரே நாளில் 13 திட்டங்களுக்கு அனுமதி அளித்ததாக சி.பி.ஐ குற்றம்சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.சந்திரகலா உட்பட 11 பேர்மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது. மேலும், 2019 ஜனவரியில் இந்த விவகாரம் தொடர்பாக 14 இடங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தியது. மேலும், கனிமங்கள் சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, அப்போதைய மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையிலிருந்த நிலையில், அந்த வழக்கை 5 ஆண்டுகளுக்குப் பிறகு சி.பி.ஐ தூசு தட்டி எடுத்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணைக்கு 29-ம் தேதி (நாளை) ஆஜராகுமாறு அகிலேஷ் யாதவுக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தியா கூட்டணியில் இருக்கும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய அரசின் ஏஜென்சிகளால் தொடர்ந்து குறிவைக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.