ஜம்தாரா: ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் உள்ள கலா ஜாரியா ரயில் நிலையம் அருகே பயணிகள் மீது ரயில் மோதிய விபத்தில் இதுவரை இருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனை அந்த மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
வித்யாசாகர் மற்றும் காசிதர் இடையே செல்லும் ரயில் (வண்டி எண் 12254, அங்கா எக்ஸ்பிரஸ்) புதன்கிழமை இரவு 7 மணி அளவில் கலா ஜாரியா ரயில் நிலையம் அருகே நின்றுள்ளது. அந்த ரயிலின் சங்கிலி இழுத்தப்பட்டுள்ள காரணத்தால் நின்றுள்ளது. இந்த சூழலில் அந்த வண்டியில் இருந்து பயணிகள் சில கீழ் இறங்கியுள்ளனர். அவர்கள் மீது மற்றொரு ரயில் மோதியது. இதில் இதுவரை இரண்டு பேரில் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதர பயணிகளின் நிலை குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. இதனை ரயில்வே நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
பயணிகள் எதிர் திசையில் இறங்கி, ரயில் தடத்தின் மீது நடந்து சென்றதே இந்த விபத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. நிகழ்விடத்தில் மருத்துவ குழுவினரும், ஆம்புலன்ஸ் வாகனமும் விரைந்துள்ளது. அங்கு ரயில்வே பாதுகாப்பு படையினரும், காவலர்களும் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல். நிகழ்விடத்துக்கு ஜம்தாரா எம்எல்ஏ இர்பான் அன்சாரி விரைந்துள்ளார். இதற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக தெரிகிறது.
இந்த விபத்து மிகுந்த வருத்தத்தை தந்துள்ளதாக ஜார்க்கண்ட் மாநில முதல்வர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.