மதுரை: தமிழக சிறைகளில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரையை சேர்ந்த ராஜா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக சிறைகளில் கைதிகளுக்கு அவசர காலங்களில் மருத்துவ உதவி வழங்க சிறை வளாகத்தில் மருத்துவ அலுவலர்களுக்கு குடியிருப்புகள் உள்ளன. ஆனால், இந்த குடியிருப்புகளில் மருத்துவர்கள் தங்குவதில்லை.
இதனால் சிறை கைதிகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் போவதால் கைதிகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில், அனைத்து ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் தமிழகத்தில் மத்திய சிறைகளிலும் மருத்துவ அலுவலர்கள், மனநல மருத்துவர்கள் மற்றும் அனைத்து சிறை ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், “தமிழகத்தில் அனைத்து சிறைகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது” என்றார். இதையடுத்து வழக்கை முடித்து வைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.