கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் நடாளுமன்றத் தொகுதியில் கடந்த மூன்று முறையாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சசி தரூர் எம்.பி-யாக வெற்றிபெற்றுள்ளார். அவரை எதிர்த்து சி.பி.ஐ, பா.ஜ.க கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்கியும் பயனில்லை. பா.ஜ.க-வின் மூத்த தலைவர் ஓ.ராஜகோபால், கும்மனம் ராஜசேகரன் உள்ளிட்டவர்கள் கடந்த இரண்டு முறையாகப் போட்டியிட்டும், அவரை வீழ்த்த முடியவில்லை. ஆனால், பா.ஜ.க கடந்த இரண்டு தேர்தல்களிலும் திருவனந்தபுரத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பா.ஜ.க-வினர் ஏ கிளாஸ் தொகுதி எனக் கருதும் திருவனந்தபுரம் தொகுதியை, இந்த முறை எப்படியாவது கைப்பற்றிவிடவேண்டும் எனத் தலைமை காய்நகர்த்தி வருகிறது. திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இந்த முறையும் சசி தரூர் களம் இறங்குவது உறுதியாகிவிட்டது. இடது முன்னணியில் சி.பி.எம் வேட்பாளராக பந்நியந் ரவீந்திரன் அறிவிக்கப்படுள்ளார். பா.ஜ.க சார்பில் இன்னும் வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படவில்லை. அதே சமயம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடபோவதாக முதலில் கூறப்பட்டது. இந்த நிலையில், இப்போது நடிகை ஷோபனா திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க முன்னாள் எம்.பி-யும் நடிகருமான சுரேஷ் கோபி, “கேரளாவில் இருந்து பா.ஜ.க-வின் பலமான அரசியல் வெளிப்படக்கூடிய தேர்தலாக இது இருக்கும். எங்களுடைய வெற்றியின் முதுகெலும்பாக பிரதமர் நரேந்திர மோடி இருப்பார். கேரளாவில் மூன்று நான்கு தொகுதிகளில் வெற்றி உறுதியாக கிடைக்கும். கேரளாவில் மத்திய அமைச்சர்கள் தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். திருவனந்தபுரம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் லிஸ்ட்டில் ஷோபனா பெயரும் உள்ளது. அவரிடம் நானே நேரில் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். வருங்காலத்தில் ஷோபனா ஓர் அரசியல்வாதி ஆகப்போகிறார் என்பது அவர் கூறும் பதிலில் இருந்து எனக்கு தெளிவாக புரிகிறது. நாங்கள் தொடர்ந்து அவருடன் பேசிவருகிறோம். இதுகுறித்து கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் குழுதான் இறுதி முடிவை எடுக்கும்” என்றார்.
அதே சமயம் திருவனந்தபுரத்தில் ஷோபனா போட்டியிட மாட்டார் என சிட்டிங் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார். இது குறித்து சசி தரூர் கூறுகையில், “திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு முதலில் அரசியல் தலைவர் பெயரை சொன்னார்கள். அதன் பின்னராக இஸ்ரோ சேர்மன் போட்டியிடப் போவதாகச் சொன்னார்கள். இப்போது நடிகை ஷோபனா பெயரைச் சொல்கிறார்கள். இதுவே அவர்களின் மனக்குழப்பத்தைக் காட்டுகிறது. அவர்கள் தொடர்ந்து மாற்றி மாற்றி பெயர்களைச் சொல்லி வருகிறார்கள். நடிகை ஷோபனா எனது தோழி. நான் அவரிடம் போனில் பேசியபோது, தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். பா.ஜ.க-வின் பிரிவினை அரசியல் கேரளாவில் விலைபோகாது” என்றார்.