`நான் பாஜக-வுக்குச் செல்வதாகக் கூறுபவர்களை…' – ஆவேசமான திருநாவுக்கரசர்

தமிழக மீனவர்கள்மீதான தாக்குதல் சம்பவங்களைத் தடுக்க முயலாத பா.ஜ.க அரசைக் கண்டித்து, திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருநாவுக்கரசர்,

“பா.ஜ.க பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியை விட பா.ஜ.க அதிக திட்டங்களை செயல்படுத்தியதாக கூறுகிறார். ஆனால், அதற்கான ஆதாரங்களை காண்பிப்பதில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டதுடன் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.4,000 கோடி நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரியது. ஆனால், மத்திய அரசோ ஒரு ரூபாய்கூட தரவில்லை. இதற்கு முதலில் பிரதமர் பதில் சொல்லட்டும். மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

பிரதமரின் சுற்றுப்பயணம் தேர்தல் ஸ்டன்ட்டாக உள்ளது. இதனால், எந்த பயனும் இல்லை. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகிறது. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 150 படகுகள், மண்ணோடு மண்ணாகி உள்ளது. அதற்கான நஷ்டஈடு தொகையை இலங்கை அரசிடமிருந்து பெற்றுத் தர வேண்டும். கையாலாகாத மத்திய அரசு தமிழக மீனவர்கள்மீதான தாக்குதலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்கான சூழலை பிரதமர் ஏற்படுத்தித் தர வேண்டும். தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தங்ககளுக்கான தொகுதியை கேட்க தார்மீக உரிமை உள்ளது. ஏற்கெனவே நான் எம்.பி-யாக உள்ளேன். எனக்கும் அந்த உரிமையுள்ளது” என்றார்.

திருநாவுக்கரசர்

அப்போது அவரிடம், “ `எம்.பி-யை கண்டா வர சொல்லுங்க’ என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதே?” என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், “நான் இங்கு வந்து கொண்டுதான் இருக்கிறேன். நீங்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள்” என்றார். அப்போது தொடந்து அந்த நிருபர், “மூன்று வருடமாக பார்க்கவில்லை. இப்போதுதான் பார்க்கிறேன்” என்றார். அதனைக் கேட்ட திருநாவுக்கரசர், ஆவேசமாக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதன் பிறகு தொடர்ந்து பேசிய அவர், “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து பிரதமர் நரேந்திர மோடி இவ்வளவு நாள் பேசாமல், தேர்தல் நேரத்தில் புகழ்ந்து பேசுவது அ.தி.மு.க-வின் வாக்குகளை கவர்வதற்காக இருக்கலாம். வாக்குகளை கவரும் உள்நோக்கத்தோடுகூட அவர் பேசி இருக்கலாம். நான் பா.ஜ.க-விற்கு செல்வதாக யாரோ எழுதியதை ஊடகங்கள் பெரிதாக்குகின்றன. என்னை நீங்கள் நினைத்தாலும் பா.ஜ.க-விற்கு அனுப்ப முடியாது. நான் பா.ஜ.க-விற்கு செல்வேன் என கூறுபவர்களை, செருப்பால் அடிப்பேன்” என்றார் ஆவேசமாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.