தமிழகத்தில் பா.ஜ.கவின் வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக, ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் யாத்திரை ஒன்றை மேற்கொண்டு வந்தார், அண்ணாமலை. இந்த யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலையில் தொடக்கி வைத்தார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடி ஒரு சாமானியன். எனவே தான் இந்தியாவில் தற்போது சாமானியர்களுக்கான ஆட்சி நடக்கிறது. இந்த யாத்திரை தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்றார் நம்பிக்கையாக. அதன்படி அனைத்து தொகுதிகளிலும் பயணம் மேற்கொண்டு இருக்கிறார், அண்ணாமலை. கடைசியாக நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.
அதில் பிரதமர் மோடி பங்கேற்றார். எனினும், `அண்ணாமலையின் யாத்திரைக்கு ‘ஆரம்பத்தில் கிடைத்த வரவேற்பு தற்போது இல்லை, பணத்தை கொடுத்து ஆட்களை அழைத்து வருகிறார்கள், அண்ணாமலைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது’ என ஏராளமான விமர்சனங்கள் இந்த யாத்திரைக்கு முன்வைக்கப்படுகின்றன.
சில சம்பவங்கள்:
முன்னதாக கடந்த 8.1.2024 அன்று சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு நடைபயணம் சென்றார், அண்ணாமலை. வழியில் பி.பள்ளிப்பட்டியில் அமைந்துள்ள புனித லூர்து அன்னையின் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றார். அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்க களேபரம் வெடித்தது. இதில் கடுப்பான அண்ணாமலை, “சர்ச் எல்லோருக்கும் சொந்தமானது. 10,000 பேரைக் கூட்டி வந்து தர்ணா பண்ணா என்ன பண்ணுவீங்க?” என்றவர், தேவாலயத்திற்குள் சென்று வழிபட்டார்.
இதையடுத்து சம்மந்தப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ‘பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்துடன் பேசுவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்தது, பொம்மிடி போலீஸ். மேலும் அண்ணாமலையின் பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது. இந்த சூழலில் கடந்த 15.2.2024 அன்று கொளத்தூர், அகரம் சந்திப்பில் ‘காக்கி சட்டை’ பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர், பா.ஜ.கவினர். பெரம்பூரில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் கொளத்தூருக்கு அண்ணாமலையை பேரணியாக அழைத்து வருவதற்காக, அங்கு கரு.நாகராஜன் தலைமையிலான குழு காத்திருந்தது. ஆனால் ரெட்டேரி வழியாக கொளத்தூரை வந்தடைந்தார்,அண்ணாமலை.
இது பெரம்பூரில் நீண்ட நேரம் காத்திருந்த கரு.நாகராஜன் தலைமையிலான டீமுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. பிறகு அவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக காரில் கொளத்தூருக்கு வந்து சேர்ந்தார்கள். மறுபக்கம் மதியம் சுமார் 2 மணியில் இருந்து அண்ணாமலை எப்போது வருவார் என தெரியாமல் நூற்றுக்கணக்கான பா.ஜ.க தொண்டர்கள் கொதித்து போய் நின்றது வேறு கதை. இதையடுத்து ஒருவழியாக நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது மாற்றுக்கட்சிகளில் இருந்து சுமார் 200 பேர் பா.ஜ.கவில் இணைவதாக மைக்கில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தி.மு.கவில் இருந்து நான்கு பேர் பா.ஜ.கவில் இணைந்தனர். அவர்கள் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பிறகு அ.தி.மு.கவில் இருந்து இருவர் பா.ஜ.கவில் இணைவார்கள் என அறிவிக்கப்பட்டது. துண்டை பிடித்துக்கொண்டு சிறிது நேரம் நின்றார், அண்ணாமலை. ஆனால் அவர்கள் வருவதற்கு தாமதமானது. இதில் கடுப்பானவர் மைக் இருக்கும் இடத்துக்கு வந்து பேச தொடங்கினார், “உங்களை பார்க்கும் போது மோடியை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டும் என நினைப்பது எனக்கு தெரிகிறது. 10 ஆண்டுகளாக நீங்கள் சம்பாதித்த சொத்து எல்லாம் ஒரே ஒரு கனமழைக்கு காணாமல் போவதை எல்லாம் சாமானிய மக்கள் சென்னையில் பார்த்து கொண்டிருக்கிறார்கள். நாட்டில் இருக்கும் பெரிய நகரங்களில் பா.ஜ.க ஆட்சியில் இருப்பதால் கட்டமைப்பு மிகவும் சரியாக இருக்கிறது. ஆனால் சென்னையில் அரசியல் குடும்பத்தை சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் சாதாரண மக்களிடம் வலி தெரியுமா?” என கொதித்தார்.
பின்னர் புறப்பட்ட அண்ணாமலைக்கு பா.ஜ.க தொண்டர்கள் பரிசுகளை வழங்கினார்கள். அப்போது சிலர் துப்பாக்கி ஒன்றை பரிசாக கொடுத்தனர். அதை வாங்கிய அண்ணாமலை மேலே தூக்கி கொண்டு சிறிது தூரம் கூட்டத்தில் நடந்தார். அது ஒரிஜினல் துப்பாக்கி போல இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு டம்மி என தெரியவந்தால் பரபரப்பு முடிவுக்கு வந்தது. அதேபோல் சுமார் 20 கிலோ எடை கொண்ட ராட்சத மீன் ஒன்றை பரிசாக அண்ணாமலைக்கு சிலர் கொடுத்தனர். அதையும் கையில் ஏந்தியபடி சிறிது தூரம் நடந்தார். இவ்வாறு அண்ணாமலை யாத்திரையின் மூலம் தனக்கான விளம்பரத்தை தேடிக்கொள்வதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த யாத்திரையின் மூலம் பாஜக பெற்றது என்ன?
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை ‘தமிழகத்தில் தாமரை மலரும்’ என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தார். அது பெரிதாக எடுபடவில்லை. பிறகு பதவிக்கு வந்த முருகன், ‘வேல் யாத்திரை’யை மேற்கொண்டார். அப்போதும் தமிழகத்தில் பா.ஜ.க தலைவர்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. எனினும் கூட்டணி மூலம் 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றனர். இந்த சூழலில்தான் அண்ணாமலைக்கு பதவி கொடுத்தார்கள். அவர் முதலில் இந்துத்துவா பிரசாரத்தை கையில் எடுத்தார். அதற்காக அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தை பேசினார்.
ஆனால் அது பெரிய வெற்றியை பெறவில்லை. தொடர்ந்து அவர் வெளியிட்ட தி.மு.க ஃப்பைல்ஸும் பெரிதாக எடுபடவில்லை. எனவே தான் பாதை யாத்திரை தொடங்கினார். ஆரம்பத்தில் இருந்த வேகம் முடியும் போது இல்லை. அதுகுறித்த பேச்சும் மக்களிடத்தில் பெரிதாக இல்லை. எனவே பா.ஜ.கவுக்கோ, அண்ணாமலைக்கோ பெரிய பலன் ஏதும் இருக்காது. வரும் தேர்தலில் முடிவுகள் வெளியாகும் போதுதான் வாக்கு வங்கி அதிகரித்திருக்கிறதா?, இல்லையா? என்பது தெரிய வரும்” என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், “அண்ணாமலையின் யாத்திரையால் எதிர்க்கட்சிகளுக்கு தான் பலன் கிடைத்து இருக்கிறது. கிட்டத்தட்ட ஓராண்டுகாலமாக இந்த பயணத்தை அவர் மேற்கொண்டு இருக்கிறார். அனைத்து பகுதிகளுக்கும் பஸ்சில்தான் சென்றார். சிறிது தூரம் மட்டும் நடந்தார். இதன் மூலம் மக்களுக்கு அவர் ஏதாவது சொல்லி இருக்கிறாரா?. மேலும்.. மேலும்.. பாஜக தன்னை ஒரு கேலி கூத்தாக மாற்றி கொள்கிறது” என்றார்.
இதுகுறித்து தமிழக பா.ஜ.க செய்தி தொடர்பாளர் எ.என்.எஸ். பிரசாதிடம் விளக்கம் கேட்டோம், “10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக பிரதமராகப் போவது 100 சதவீதம் உறுதியாகிவிட்டது. இதை பா.ஜ.கவினராகிய நாங்கள் மட்டும் சொல்லவில்லை. எதிர்க்கட்சிகளே பேசத் தொடங்கி விட்டனர். அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள் யாத்திரை” மாபெரும் வெற்றி அடைந்துள்ளது என்பதையே எதிர்க்கட்சிகளின் பேச்சுகள் காட்டுகின்றன. இதன் மூலமாக பெண்கள், இளைஞர்கள், முதல் நிலை வாக்காளர்கள், மாணவர்கள் என அனைவருமே ஈர்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே வரும் தேர்தலில் தமிழகதில் புதிய வரலாற்றை அண்ணாமலை படைப்பார்” என்றார்.
அண்ணாமலையிஜ்ன் இந்த யாத்திரை தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதா? உங்கள் கருத்து என்ன?!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY