கடலூர்: பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.15 கோடிக்கு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியில் கடந்த 2011-2016ஆம் ஆண்டுகளில் நகரமன்ற தலைவராக பதவி வகித்தவர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம். அப்போது நகராட்சி ஆணையராக பணிபுரிந்த பெருமாள் மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பண்ருட்டி பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தை வாகன நிறுத்துமிடமாக அமைக்க ஏலம் விட்டதில் சுமார் ரூ.20 லட்சம் வரை முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த முறைகேடு தொடர்பாக கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் நேற்று (பிப்.27) எம்எல்ஏ சத்யாவின் கணவரும், முன்னாள் நகர்மன்ற தலைவருமான பன்னீர்செல்வம், முன்னாள் பண்ருட்டி நகராட்சி ஆணையர் பெருமாள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று (பிப்.28) காலை 6.30 மணிக்கு பண்ருட்டி காமராஜ் நகரில் உள்ள முன்னாள் நகர் மன்ற தலைவர் பன்னீர்செல்வம், சென்னை பெரம்பூர் ஐவகர் நகர் தியாகராஜன் தெருவில் உள்ள முன்னாள் நகராட்சி ஆணையர் பெருமாள் ஆகிய 2 பேர் வீடுகளிலும், இதில் தொடர்புடைய நபர்கள் மற்றும் அவர்களது பினாமிகளாக கருதப்படும் பண்ருட்டி கந்தன்பாளைம் பெருமாள், பண்ருட்டி, இந்திரகாந்திசாலை செந்தில்முருகன், பண்ருட்டி, திருவதிகை கடலூர் மெயின்ரோடு பிரசன்னா, பண்ருட்டி சத்தியமூர்த்தி தெரு மோகன்பாபு ஆகிய 4 பேர் வீடுகள் என 6 பேர் வீடுகளிலும் கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ந.தேவநாதன் தலைமையில் 6 குழுக்கள் சோதனையை மேற்கொண்டனர்.
இதில் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் குற்றத்தில் தொடர்புடைய ஆவணங்கள், நில மற்றும் மனை சொத்து ஆவணங்கள் 47 கைப்பற்றப்பட்டன. அவற்றின் சொத்து மதிப்பு ரூ.15 கோடியே 64 லட்சத்து 32 ஆயிரத்து 237 ஆகும். தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாரும், சிதம்பரம் எம்எல்ஏவுமான பாண்டியன், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி எம்எல்ஏவுமான அருண்மொழிதேவன் மற்றும் அதிமுகவினர், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை அறிந்து முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டுக்குச் சென்றனர். அவர்களை லஞ்ச ஒழிப்பு போலீஸார் உள்ளே விடவில்லை. சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பின்னர் புறப்பட்டு சென்றனர்.