“பல்லடத்திலும், மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றேன்” – பிரதமர் மோடி நெகிழ்ச்சி

சென்னை: “பல்லடத்திலும் மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றேன். மகாராஷ்டிராவின் யவத்மாலுக்குச் புறப்படுவதற்கு முன் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இன்றைய நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” எனப் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அத்துடன், பல்லடம் விழாவுக்கு வருகை தந்தது, மேடையில் பேசியது உள்ளிட்ட காட்சிகள் அடங்கிய வீடியோவையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, பாஜகவின் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவையொட்டி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று (பிப்.27) நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக்கு புகழாரம் சூட்டினார், இண்டியா கூட்டணி கட்சிகள், நாட்டை கொள்ளையடிக்க முயற்சிப்பதாக கடுமையாக விமர்சித்தார்.

பின்னர் மதுரை சென்ற பிரதமர் மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். அது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில், “மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்ததை பாக்கியமாக உணர்கிறேன்” எனத் தமிழில் பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து இன்று (பிப்.28), தூத்துக்குடி வஉசி துறைமுக வளாகத்துக்கு ஹெலிகாப்டரில் இன்று காலை 9.30 மணிக்கு வரும் பிரதமர் மோடி, 9.45 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும் அரசு விழாவில், சுமார் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கிவைக்கிறார். குறிப்பாக, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டிவைக்கிறார்.

தூத்துக்குடி அரசு விழாவில்பங்கேற்ற பின்னர், பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். காலை 11 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டரில் செல்லும் பிரதமர் 11.15 மணிமுதல் 12.30 மணி வரை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் பகல் 12.45 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்லும் பிரதமர், அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இந்நிலையில் தூத்துக்குடி செல்லும் முன்னர் தமிழில் அவர் ட்வீட் செய்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.