பாசிக்குடாக் கடற்கரையை “புளு பிளேக் பீச் (Blue Flag Beach)” ஆகத் தரமுயர்த்தும் வேலைத் திட்டம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட கடற்கரை முகாமைத்துவக் குழுவின் இரண்டாவது சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வு கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளீதரன் தலைமையில் (27) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது குறித்த திட்டத்தின் தேசிய இணைப்பாளர் சது விக்ரமசிங்க “புளு பிளேக் பீச்” வேலைத்திட்டம் தொடர்பான அறிமுகத்தை வழங்கினார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளீதரன் இந்நிகழ்வில் அவர் “மாவட்ட கடற்கரை முகாமைத்துவக் குழுவில் அங்கத்துவம் வகிக்கும் சகல திணைக்களங்கள், அதிகாரசபைகள் போன்ற அங்கத்துவ நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்படுவதனால் குறித்த வேலைத் திட்டத்தின் இலக்கை அடைந்து கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சின் அனுசரணையில் மேற்கொள்ளப்படவுள்ள குறித்த திட்டத்திற்காக நாட்டிலுள்ள கடற்கரைகளில் தென் மாகாணத்தின் உணவட்டுன, பெந்தோட்டை மற்றும் கிழக்கு மாகாணத்தின் அருகம்பே, பாசிக்குடா ஆகிய நான்கு கடற்கரைகள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் இலங்கைக் கடற்படை, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, உள்ளுராட்சி நிறுவனங்கள் என்பவற்றுடன் இணைந்து கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினூடாக குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இக்கலந்துரையாடலில் கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட அதிகாரி ஆசிபா பாசிக்குடாக் கடற்கரையை “புளு பிளேக் பீச் (Blue Flag Beach)” ஆக தரமுயர்த்துவதற்காக முன்னெடுக்கப்டவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பாகத் தெளிவுபடுத்தினார்.
“புளு பிளேக் பீச் (Blue Flag Beach)” தரச் சான்றிதழ் டென்மார்க் நாட்டில் அமைந்துள்ள சுற்றாடல் கல்விக்கான மன்றம் (FEE) எனும் சர்வதேச நிறுவனத்தினால் சுற்றாடல் கல்வி மற்றும் தகவல், தரமான நீர், சுற்றாடல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் சேவை ஆகிய பிரதான நான்கு காரணிகளுடன் காணப்படும் கடற்கரைகளுக்கு வழங்கப்படுகின்றது.
இதற்காக பாசிக்குடாக் கடற்கரையில் தகவல் நிலையம் அமைத்தல், அறிவித்தல் பலகைகளைப் பொருத்துதல், கடற்கரைப் பயனாளிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்துதல், சுகாதார வசதிகள், கழிவகற்றல் சேவைகளை பராமரித்தலும் தராமானதாகப் பேணுதலும மற்றும் மீள்சுழற்சிக் கழிவுகளை சேகரித்தலும் அதனை ஒப்படைத்தலும், போன்ற செயற்பாடுகளை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, கல்குடா பிரதேச சபை ஆகியவற்றின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் நீரின் மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, குளியல் மற்றும் விளையாட்டு போன்றவை தொடர்பாக டிஜிடல் அறிவித்தல் பலகை அமைத்தலுக்காக ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் உலகத் தரத்தில் கடற்கரைச் சுற்றுலாவை அபிவிருத்தி செய்து, சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்து, நிலைபேறான, சுற்றுலாத் தகவல்கள், ஆரோக்கியமான சூழலுடன், சந்தோசமான தரமான கடற்கரைச் சுற்றுலா அனுபவத்தை வழங்குவதே சுற்றுலாத் துறை அமைச்சின் நோக்கமாகும்.
இந்நிகழ்வில் சுற்றுலாத் துறை அமைச்சின் மாவட்ட உத்தியோகத்தர் எஸ். ஏ. விவேகாநந்தராஜ், குறித்த திட்டத்தின் தேசிய இணைப்பாளர் சது விக்ரமசிங்க, மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மலன், கல்குடா பிரதேச சபையின் செயலாளர் எஸ். நவநீதன் உட்பட இலங்கை கடற்படை, பொலிஸ், மற்றும் அரச திணைக்களங்கள் பலவற்றின் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.