ஐயுஎம்எல் என்பது இஸ்லாமிய சமுதாய மக்களின் உணர்வுகளை பிரதிபலிபலிக்கும் அரசியல் ரீதியான இயக்கம். ஐயுஎம்எல் பொறுத்தவரை அண்ணா காலத்தில் தொடங்கி திமுகவுடனேயே கூட்டணியில் உள்ளது. இடையில், 1999-ல் திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது மட்டுமே அதிமுகவுடன் இணைந்து செயல்பட்டோம்.
திமுக தொகுதி ஒதுக்கீடு திருப்தியளிக்கிறதா? – திருப்தியாக உள்ளது. எல்லா காலத்திலும் ஒரு தொகுதிதான். நாங்கள் நிபந்தனை ஏதும் விதிக்கவில்லை.
மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டீர்களே? – மாநிலங்களவை காலியிடம் வரும் போது யோசிப்போம் என திமுக தெரிவித்துள்ளது.
இண்டியா கூட்டணியில் இருந்து நிதீஷ்குமார் விலகிவிட்டார். மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் விலகி நிற்கிறார்களே? – இண்டியா கூட்டணி உருவாக முக்கிய காரணமானவர் திமுக தலைவர் ஸ்டாலின். அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்படுவதாலும், இந்துத்துவாவை திணிப்பதாலும் தேர்தலில் பாஜகவை எதிர்க்க உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் இருப்பது போன்ற கூட்டணி, தேசியஅளவில் உருவாகவில்லை. ஆனாலும், பாஜகவுக்கு எதிரான உணர்வு உள்ளது.
ராமநாதபுரத்தில் மீண்டும் தற்போதைய எம்.பி. நவாஸ் கனியே போட்டியிடுகிறாரா? – அவர்தான் போட்டியிடுவார். திருச்சியில் வரும் மார்ச் 2-ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் முறைப்படி அறிவிப்போம். அதற்கு முன்னதாக, கேரளாவில் உள்ள நபிகள் நாயகத்தின் 38-வது வாரிசிடம் தகவல் தெரிவித்துவிட்டு வருவோம்.
பாஜகவே மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமிய அமைப்புகளுக்கு நெருக்கடி உருவாகுமா? – என்ன நெருக்கடி ஏற்படும். அனைத்தும் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. மாற்றங்கள் நிச்சயம் வரத்தான் செய்யும். ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் உள்ளது. ராணுவத்தை மிக உயரிய நிலைக்கு இந்த அரசு கொண்டு சென்றுள்ளது.
இறக்குமதி செய்து வந்த நிலையில், பல பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம். நாட்டில் வளர்ச்சி இல்லை என்று கூற முடியாது. அந்த வளர்ச்சி மக்களுக்கு உரிய வகையில் செல்கிறதா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.