போதைப் பொருள் வழக்கில் சிம்பு பட இயக்குனர்?

தெலுங்குத் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் கிரிஷ். இவர் சிம்பு, அனுஷ்கா நடித்த 'வானம்' படத்தையும் தெலுங்கில் “கம்யம், வேதம், கவுதமிபுத்ர சட்டகர்னி, என்டிஆர், மணிகர்ணிகா, கொண்ட போலம்” உள்ளிட்ட படங்களையும் இயக்கியவர். தற்போது பவன் கல்யாண் நடிக்கும் 'ஹரிஹர வீர மல்லு' படத்தை இயக்கி வருகிறார். அனுஷ்கா நடிக்க உள்ள ஒரு படத்தையும் இயக்க உள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தின் கச்சிபவுலி என்ற இடத்தில் பிரபல ஹோட்டல் ஒன்றில் ஐதராபாத் போலீசார் நடத்திய போதைப் பொருள் சோதனையில் சில பிரபலங்கள் சிக்கியுள்ளனர். தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கேதார் செலகம் செட்டி, இயக்குனர் கிரிஷ், நடிகை லிசி கணேஷ் ஆகியோரது பெயர்கள் அந்த சோதனையில் அடிபட்டுள்ளது.

தயாரிப்பாளர் கேதார் போதைப்பொருள் உட்கொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சைபராபாத் போலீஸ் தெரிவித்துள்ளது. நடிகை லிசி இன்னும் விசாரணைக்கு வரவில்லையாம். பாஜக பிரமுகர் யோகானந்த் மகன் கஜ்ஜலா விவேகானந்தா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்தான் லிசி அவரது சகோதரி குஷிதா ஆகியோரது பெயரையும் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளாராம்.

கஜ்ஜலா விவேகானந்தாவும், இயக்குனர் கிரிஷ்ஷும் நெருங்கிய நண்பர்களாம். இதனிடையே, தனது நண்பர்களை சந்திக்கவே அந்த ஹோட்டலுக்கு சென்றதாகவும், அரை மணி நேரம் மட்டுமே அங்கு இருந்ததாகவும் மீடியாவிடம் இயக்குனர் கிரிஷ் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் பயன்படுத்தியது குறித்தான உடல் பரிசோதனைக்கு கிரிஷ் சம்மதித்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தற்போது தெலுங்கு திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த இயக்குனர் பூரி ஜெகன்னாத், நடிகைகள் ரகுல் ப்ரீத், சார்மி கவுர், முமைத் கான், நடிகர் ரவி தேஜா, தருண், சுப்பராஜு, நவ்தீப் உள்ளிட்டவர்கள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை செய்தனர் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.

தமிழ் சினிமாவில் திமுக பிரமுகரும் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ளார். தலைமறைவாகியுள்ள அவர் கைது செய்யப்பட்ட பின்புதான், இங்கும் யாரெல்லாம் சிக்குவார்கள் என்பது தெரிய வரும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.