மேற்கு வங்காளத்தில் ஆதார் அட்டை முடக்கப்பட்டாலும் தேர்தலில் வாக்களிக்க முடியும்: தேர்தல் தலைமை ஆணையர் அறிவிப்பு

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தில் ஏராளமான வாக்காளர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர்களால் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி 5 பேர் கொண்ட திரணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் குழு டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியது.

இந்தக் குழுவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சுகேந்து சேகர் ராய் தலைமை வகித்தார். அவர் தலைமையிலான குழு, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அருண் கோயல் ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கியது.

இதுகுறித்து சுகேந்து சேகர் ராய் கூறும்போது, “இன்று மட்டும் 500 வாக்காளர்களின் ஆதார் எண்கள் மேற்கு வங்காளத்தில் முடக்கப்பட்டுள்ளன. இது சட்டவிரோதமாகும். இதுதொடர்பாக, தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தவேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து முடக்கப்பட்ட ஆதார் எண்கள் பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரிணாமுல் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழுவிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் உறுதியளித்துள்ளார்.

மேலும் முடக்கப்பட்ட ஆதார் அட்டைகளால் ஒருவர் வாக்களிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்றும், அவர்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காண்பித்து தேர்தலின்போது வாக்களிக்கலாம் என்றும் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.