மோட்டார் வாகன ஆய்வாளராக நடித்த நடிகரின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து

மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் சுராஜ் வெஞ்சாரமூடு. அதைத்தொடர்ந்து சமீபகாலமாக குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டி வருகிறார். கடந்த வருடம் இவர் தனது காரை ஓட்டிய போது சரத் என்கிற 31 வயது வாலிபர் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில் அந்த வாலிபர் பலத்த காயங்களுக்கு ஆளானார். இதற்கு சுராஜ் வெஞ்சாரமூடு அதிவேகமாக கார் ஓட்டியது தான் காரணம் என அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

இது குறித்து விசாரணைக்கு வருமாறு மோட்டார் வாகன அலுவலகத்தில் இருந்து மூன்று முறை சுராஜூக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் அதற்கு எந்தவித விளக்கமும் தரவில்லை. இந்த நிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுராஜ் வெஞ்சாரமூடுவின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் டிரைவிங் லைசென்ஸ் என்கிற படம் வெளியானது. இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் கதாபாத்திரத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு தான் நடித்திருந்தார். அந்த படத்தில் நடிகரான பிரித்விராஜுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு கெடுபிடி காட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சுராஜூக்கு இப்போது அவரது டிரைவிங் லைசென்சே தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது ஆச்சரியமான விஷயம்தான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.