புதுடெல்லி: ரயில்வேயில் வேலை வழங்க நிலம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் பிஹார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவிக்கும், அவரது இரண்டு மகள்களுக்கும் டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரான லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேயில் வேலை வழங்க லஞ்சமாக நிலம் பெறப்பட்டதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில், லாலுவின் மனைவியும் பிஹார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, அவரது இரண்டு மகள்களான மிசா பாரதி, ஹேமா யாதவ் ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி ராப்ரி தேவியும் அவரது இரண்டு மகள்களும் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து, கடந்த 9-ம் தேதி அவர்களுக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அவர்களுக்கு வழக்கமான ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத் துறை, தங்கள் தரப்பு வாதத்தை வைக்க கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை வைத்தது. இதையடுத்து, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, மூவருக்கும் ஜாமீன் வழங்க அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில், அவர்களுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் மட்டுமே ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டது. இதையடுத்து, மூவருக்கும் ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.