திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அர்ச்சனா (26), சென்னை அடையாறு லட்சுமிபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரின் கணவர் இறந்துவிட்டார். அதனால் குழந்தைகளை அம்மா வீட்டில் விட்டு விட்டு சென்னையில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அர்ச்சனா, போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயனிடம் ஒரு மாதம் மருத்துவ விடுப்பு வேண்டும் என்று கேட்டிருந்தார். அம்மாள், நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அவருக்கு மருத்துவ விடுப்பு கொடுக்க முடியவில்லை.
அதனால் காவலர் அர்ச்சனா மனவேதனையிலிருந்தார். இந்த நிலையில் கடந்த 27-ம் தேதி இன்ஸ்பெக்டர் அறைக்குச் சென்ற அர்ச்சனா, மீண்டும் மருத்துவ விடுப்புக்கு அனுமதிக்கும்படி கேட்டிருக்கிறார். அப்போது தேர்தல் சமயத்தில் மருத்துவ விடுப்பு வழங்க முடியாது என்று இன்ஸ்பெக்டர் கூறியதாகச் சொல்லப்படுகிறது. அதனால் அவரின் அறையிலிருந்து அழுதபடி வெளியில் வந்த காவலர் அர்ச்சனா, திடீரென பிளேடால் தன்னுடைய வலது கையை அறுத்துக் கொண்டார். அதனால் ரத்தம் கொட்டியது.
அதைப்பார்த்த சக காவலர்கள் அதிர்ச்சியடைந்ததோடு காவலர் அர்ச்சனாவுக்கு முதல் உதவி அளித்தனர். பின்னர் அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். சிகிச்சைக்குப் பிறகு காவலர் அர்ச்சனா வீட்டுக்குச் சென்றார். இந்தச் சம்பவத்தால் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீஸார் கூறுகையில், “பெண் காவலர் கையை அறுத்த சம்பவம் குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பெண் காவலர் அர்ச்சனா மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. உயரதிகாரிகள் சொல்லும் தகவலின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.