Bank Fraud: வங்கிகளில் பணத்தை போட்டு வைப்பவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் வங்கி மேலாளரை அணுகுவது வழக்கம். ஆனால், வங்கி மேலாளரே தனது வைப்பு நிதி சேமிப்புகளை திருடிவிட்டதாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
குர்கானை சேர்ந்த ஸ்வேதா ஷர்மா என்பவரும், அவரது கணவரும் அமெரிக்காவில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் தங்களது வாழ்நாள் சேமிப்பான சுமார் 13.5 கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளனர்.
ஒரு வங்கியாளரின் ஆலோசனையின் அடிப்படையில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் என்.ஆர்.இ கணக்கை தொடங்கியுள்ளார். இந்தியாவில் அதிக வட்டி கிடைக்கும் என்பதால் வைப்பு நிதி திட்டத்தில் (Fixed Deposit) முதலீடு செய்துள்ளனர்.
2019-ம் ஆண்டில் தொடங்கி 2023-ம் ஆண்டு வரை தங்களது 13.5 கோடி ரூபாயை இந்த வைப்பு நிதிக் கணக்கில் முதலீடு செய்திருக்கின்றனர். இந்தப் பணம் வட்டி வருமானத்துடன் சேர்த்து சுமார் 16 கோடி ரூபாயாக வளர்ந்திருக்க வேண்டும். மாறாக, கடந்த ஜனவரி மாதம் தனது பணம் மாயமாகிவிட்டதை கண்டுபிடித்துள்ளார்.
வங்கி மேலாளரே தனது பணத்தை மோசடி செய்து திருடிவிட்டதாக ஸ்வேதா ஷர்மா குற்றம் சாட்டியுள்ளார். சம்பந்தப்பட்ட மேலாளர் போலியான அறிக்கைகளை காட்டி, ஸ்வேதாவின் பெயரில் போலி இமெயில் ஐ.டி உருவாக்கி, மொபைல் எண்களில் மாற்றம் செய்து, கணக்கு செயல்பாடுகள் குறித்து தகவல் பெற முடியாத அளவுக்கு மாற்றங்களை செய்து பணத்தை எடுத்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனினும், இதுகுறித்து ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்வேதாவுக்கு எல்லா ஒத்துழைப்பும் வழங்குவதாகவும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தெரிவித்துள்ளது. ஸ்வேதா ஏற்கெனவே தனது கணக்கில் இருந்து சுமார் 2 கோடி ரூபாய் பணத்தை எடுத்துவிட்ட நிலையில், பிரச்னைக்குரிய சுமார் 9.27 கோடி ரூபாயை வங்கி சார்பில் செலுத்துவதாக ஐ.சி.ஐ.சி.ஐ தெரிவித்துள்ளது. ஆனாலும், கோரிக்கையை நிராகரித்த ஸ்வேதா, வழக்கு முடியும் வரை பணத்தை பெறப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தும்படி டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவிடம் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி புகார் பதிவு செய்துள்ளது. வழக்கு விசாரணை ஒருபுறம் நடந்தாலும் கூட, ஐ.சி.ஐ.சி.ஐ போன்ற ஒரு பெரிய வங்கியில் இந்த மோசடி நடந்திருப்பது நமது புருவத்தை உயர்த்த செய்கிறது. மேலும், என்னதான் பெயர்பெற்ற வங்கியில் பணத்தை டெபாசிட் செய்துவைத்தாலும் கூட, நமது கணக்கை அவ்வப்போது சோதனை செய்து, எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியத்தை இந்த விவகாரம் நமக்கு உணர்த்துகிறது.