ஆத்திரத்தை தூண்டிய ஹனிமூன் கேள்வி… டிவி லைவ் ஷோவில் காமெடியனை அறைந்த பாகிஸ்தான் பாடகி

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகி ஷாஜியா மன்சூர், டிவி லைவ் ஷோவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது, அவருடன் உரையாடிய காமெடி நடிகர் ஷெர்ரி நன்ஹாவுடன் வாக்குவாதம் ஏற்பட்டு, அவரை தாக்குவது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஹனிமூன் குறித்து காமெடி நடிகர் ஷெர்ரி நன்ஹா நகைச்சுவையாக பேசுவதும், பின்னர் அவர் தாக்கப்படுவதும் பதிவாகி உள்ளது.

“ஒருவேளை நமக்கு திருமணம் ஆனால், நமது ஹனிமூனுக்கு உங்களை உடனடியாக மான்டே கார்லோவுக்கு அழைத்துச் செல்வேன். நீங்கள் எந்த வகுப்பில் பயணிக்க விரும்புவீர்கள்? என்று சொல்ல முடியுமா?” என்று நகைச்சுவையாக கேட்கிறார் ஷெர்ரி நன்ஹா.

இந்த கேள்வியை எதிர்பார்க்காத ஷாஜியா மன்சூர் ஆத்திரமடைந்து, ஷெர்ரி நன்ஹாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை சரமாரியாக தாக்கினார். அத்துடன் அவரை மூன்றாம் வகுப்பில் பயணிக்கும் நபர் என அவரை விமர்சனம் செய்தார்.

“கடந்த முறையும் இப்படித்தான் நடந்தது. அப்போது எனது கோபத்தை பிராங்க் என கூறி மூடி மறைத்தேன். ஆனால் இந்த முறை அப்படி இருக்கமுடியாது. நீங்கள் பெண்களிடம் இப்படித்தான் பேசுவீர்களா? ஹனிமூன் என்கிறீர்கள்” என்றும் கடுமையாக திட்டினார்.

பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளர் குறுக்கிட்டு, இதுபோன்ற சம்பவங்களை தடுக்க ஸ்கிரிப்டை பின்பற்றவேண்டும் என்றும், அதைத் தாண்டி எதுவும் பேசவேண்டாம் என்றும் காமெடி நடிகர் நன்ஹாவிடம் கூறினார்.

எனினும் ஆத்திரம் தணியாத பாடகி ஷாஜியா மன்சூர், ஸ்டுடியோவை விட்டு வெளியேறினார். இனி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன் என்றும் கூறிவிட்டு சென்றார்.

இந்த வீடியோவைப் பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர். பெரும்பாலான பயனர்கள், இந்த வீடியோ குறித்த நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினர். இதுவும் ஸ்கிரிப்ட் செய்யப்பட்டதாக இருக்குமோ? என்று சிலர் பதிவிட்டனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.