புதுடெல்லி: ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் (ஆர்எஸ்எஸ்) வழியில் விஷ்வ இந்து பரிஷத்திலும் (விஹெச்பி) முழு நேரத் தொண்டர்கள் அமர்த்தப்பட உள்ளனர். இவர்களை நாட்டின் ஒவ்வொரு இந்து குடும்பத்திலிருந்தும் சேர்க்க அயோத்தியின் விஹெச்பி மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்துத்துவா கொள்கைவாதிகளின் முக்கிய பழம்பெரும் அமைப்பாக இருப்பது ஆர்எஸ்எஸ். பாஜகவின் தாய் அமைப்பான இதன் மேலும் ஒரு முக்கிய பிரிவாக இருப்பது விஹெச்பி. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்த அமைப்பு இது. ஆகஸ்ட் 29, 1964-இல் இந்து மதத்தை காக்கும் நோக்கத்தில் துவக்கப்பட்டது. இந்த ஆண்டில் தனது 60-ஆவது ஆண்டை விஹெச்பி நிறைவு செய்கிறது.
இந்நிலையில், இதன் தேசிய மாநாடு தலைவர் அலோக் குமார் தலைமையில், உத்தரப் பிரதேசம் அயோத்தியில் பிப்ரவரி 25 முதல் 27 வரையில் நடைபெற்றது. இதன் இறுதிநாளில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இனி இதில் அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் போல் முழுநேரத் தொண்டர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் விஹெச்பியின் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “ஆகஸ்டில் அறுபது ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு விஎச்பி மேலும் விஸ்தரிக்கப்பட உள்ளது. இதற்கு சாதகமாக, நாட்டில் பாஜகவால் மாறிவரும் அரசியல் சூழல் உள்ளது.
நம் தேசிய அடையாளம் மற்றும் கலாச்சாரத்தை காக்கும் பொறுப்பு, இந்தியாவின் ஒவ்வொரு இந்து குடும்பத்துக்கும் உள்ளது. இதற்காகப் பணி செய்ய அந்த ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு இளைஞரை தேர்வு செய்ய உள்ளோம். இதற்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நாடு முழுவதிலும் துவங்க உள்ளோம். இவர்களில் தீவிரம் காட்டுபவர்களை விஎச்பியின் முழு நேரத் தொண்டராக்கவும் முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்தனர்.
அரசியலில் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் ஒவ்வொரு தேர்தலிலும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பாஜகவுக்காக பணியாற்றுவது வழக்கமாக உள்ளது. இதற்காக அதன் முழு நேரத் தொண்டர்கள் அதிகப் பொறுப்புடன் பணியாற்றுவதும், அவர்களில் ஒருவருக்கு அவ்வப்போது பாஜகவில் பொறுப்பு அளிப்பதும் தொடர்கிறது. இந்த வகையில், இனி விஹெச்பியிலும் முழு நேரத் தொண்டர்கள் அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது முதல் இந்தியாவை இந்து நாடாக மாற்ற குரல்கள் எழுந்து வருகின்றன. தனது ஒவ்வொரு திட்டத்தையும் தொலைநோக்குப் பார்வையில் அமலாக்குவது இந்துத்துவாவினரின் செயல்பாடாக உள்ளது. எனவே, விஹெச்பியின் இந்த புதிய முடிவு மதவாதத்தை பரப்பும் நோக்கமாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன என்ற கருத்து நிலவுகிறது.
முழு நேரத் தொண்டர்களை சேர்க்கும் முகாம்கள் மார்ச் மற்றும் ஏப்ரலுக்கு இடையே ஒரு வாரத்துக்கு நாடு முழுவதிலும் நடைபெற உள்ளன. இதற்கான களமாக விஹெச்பி தேர்வு செய்துள்ள இடங்கள் முக்கிய கோயில்கள் எனக் கருதப்படுகிறது. இக்கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அதில் கலந்துகொள்பவர்களை முழு நேரத் தொண்டர் பணியில் சேர்க்க முயற்சிக்கப்பட உள்ளது. இதன் பலன், மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு அதிகம் கிடைக்கும் என எதிர்நோக்கப்படுகிறது.