தர்மசாலா,
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது.
இந்த போட்டி இந்திய சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாக அமைய உள்ளது. இந்திய அணிக்காக இதுவரை 312 வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி விளையாடியுள்ள வேளையில் 13 வீரர்கள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது இந்த சாதனை பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வினும் இணைய உள்ளார்.
அது மட்டும் இன்றி தமிழ்நாட்டில் இருந்து ஸ்ரீகாந்த், தினேஷ் கார்த்திக், முரளி விஜய் உள்ளிட்ட வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருந்தாலும் யாரும் இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது இல்லை.
அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற முதல் தமிழக வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்த உள்ளார்.