சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கு தேர்வானவர்களின் தற்காலிக தேர்வு பட்டியலைரத்து செய்த உயர் நீதிமன்றம், இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி, புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட தேர்வு பட்டியலை2 வாரத்தில் வெளியிட டிஎன்பிஎஸ்சிக்கு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதிகள் பதவிகளை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் அடங்கிய தற்காலிக தேர்வு பட்டியல் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி வெளியிடப்பட்டது.
‘இந்த பட்டியலில் பின்னடைவு மற்றும் தற்போதைய புதிய பணியிடங்களுக்கான இடஒதுக்கீடு முறை சரியாகபின்பற்றப்படவில்லை. அதிக மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்’ என்று கூறி, பாதிக்கப்பட்ட தேர்வாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு:
அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை பொதுப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் விதமாக, சிவில் நீதிபதிகளுக்கான தற்காலிக தேர்வு பட்டியலில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டுள்ளது. எனவே, அந்த பட்டியலை ரத்து செய்கிறோம். ஏற்கெனவே உள்ள பின்னடைவு காலி பணியிடங்கள் மற்றும் புதிய பணியிடங்களுக்கு, அதிக மதிப்பெண் பெற்றவர்களை பொதுப் பிரிவில் சேர்த்தும், மற்றவர்களை உரிய இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றியும், புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட தேர்வு பட்டியலை டிஎன்பிஎஸ்சி 2 வாரங்களில் வெளியிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.