புதுடெல்லி: பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
தேசம் பொதுத் தேர்தலை சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கும் இந்த முக்கியமான தருணத்தில்,இந்தப் பட்டியல் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. பட்டியலில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பட்டியலின் முதல் பத்து இடங்களை பாஜக மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கப் பிரமுகர்கள் பிடித்துள்ளனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். தொழிலதிபர் கவுதம் அதானி 10வது இடத்தில் உள்ளார். ஹிண்டன்பர்க் சர்ச்சையில் இருந்து மீண்டு வந்தது அவரின் இந்த எழுச்சிக்கு வழிவகுத்துள்ளது.
பட்டியலின் பாஜக ஆதிக்கத்தை மீறி கர்நாடகா முதல்வர் சித்தராமையா மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்னகத்தை முன்னிறுத்தும் முகங்களாக இடம்பெற்றுள்ளனர். பல்வேறு துறைகளில் அதிகாரம் மற்றும் செல்வாக்கு செலுத்தி, நாட்டுக்குள்ளும் அதற்கு அப்பாலும் அவர்களின் முடிவுகள் மற்றும் நகர்வுகளின் அதிர்வலைகளை இந்தப்பட்டியல் கவனத்தில் கொள்கிறது.
அரசியல், தொலைநோக்கு பார்வை கொண்ட தொழில்முனைவோர், கலாச்சார அடையாளங்கள் கொண்ட சிந்தனையாளர்கள் என இந்தப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
பட்டியலில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா 14-வது இடத்திலும், மேற்கு வங்க முதல்வர், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி 15வது இடத்திலும், டெல்லி முதல்வர், ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், 18வது இடத்திலும், கர்நாடகா முதல்வர் சித்தராமையா 22 வது இடத்திலும், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், 24வது இடத்திலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 25வது இடத்திலும் உள்ளனர். காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் 16வது இடத்தில் உள்ளார்.
பட்டியலின் முதல் 10 இடங்ளைப் பிடித்தவர்கள்:
1. நரேந்திர மோடி, இந்திய பிரதமர்.
2. அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர்.
3. மோகன் பக்வத், ஆர்எஸ்எஸ் தலைவர்.
4. டி.ஒய். சந்திரசூட், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.
5. எஸ். ஜெய்சங்கர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்.
6. யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேச முதல்வர்.
7. ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர்.
8. நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர்.
9. ஜெ.பி.நட்டா, பாஜக தேசிய தலைவர்.
10. கவுதம் அதானி, தலைவர், அதானி குழுமம்.