புதுடெல்லி: டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தில், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டார். அப்போது உரை நிகழ்த்தியவர், போராடும் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு இந்தியா உலக அரங்கில் வெட்கி தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களாக பஞ்சாப் மாநிலம் ஷம்பு மற்றும் கனோரி எல்லைகளில் விவசாயிகளின் தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமது டெல்லி எல்லைகளின் தொடர் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து விவசாயிகள் விரிவான ஆலோசனை செய்து வருகின்றனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரான பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டார். பிறகு நேற்று அவர் ஷம்பு எல்லையில் நடைபெற்று வரும் போராட்டக் கூட்டத்திலும் பேசினார்.
அப்போது ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உரையாற்றியதாவது: மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி கடந்த 2014 தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை முழுமையும் நிறைவேற்றுவோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்தார்கள்.
ஆனால், அதை இதுவரையிலும் நிறைவேற்றவில்லை. வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக கடந்த 2020-21ம் ஆண்டு போராடிய போது உடனடியாக வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெறுவதாகவும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவதற்கான நிரந்தர சட்டம் கொண்டு வருவதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர். கடந்த முறை போராட்டத்தின் போது, விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதாகக் கூறப்பட்டது. இதுபோல், மத்திய அரசு அளித்த பல வாக்குறுதி எதனையும் நிறைவேற்றவில்லை.
இதனால், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்று கூறி விவசாயிகள் அமைதி வழியில் டெல்லி நோக்கி புறப்பட்டார்கள். அவர்களை தடுத்து நிறுத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறது அரசு.
இதனை வன்மையாக கண்டிப்பதோடு, இச்செயலை இந்திய மக்கள் மன்னிக்க மாட்டார்கள். துப்பாக்கியால் சுடுவதை கைவிட்டு கோரிக்கைகளை மோடி அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும். விவசாயிகள் போராட்ட களத்தில் உள்ள தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விரைந்து தீர்வு காண வேண்டும். விவசாயிகள் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உலகமே பார்த்து வியந்து வருகிறது.
விவசாயி சுப்ரவன் சிங் சுட்டுக் கொல்லப்பட்டதால் உலக அரங்கில் இந்தியா வெட்கித் தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறும் போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் மட்டும் நடத்துவதாக கூறி திசை திருப்ப முயற்சிக்கிறது.
இதில் துளியும் உண்மை இல்லை. இப்போராட்டத்துக்கு ஆதரவாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை விவசாயிகள் ஒன்றுகூடி அரசியல் சார்பற்று போராடி வருகிறார்கள். நேற்று மதுரை வந்த பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து ’கோ பேக்’ மோடி என கருப்புக் கொடி காட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தமிழ்நாட்டில் இருந்து டெல்லி போராட்டத்திற்கு வரும் விவசாயிகளை இடையிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்கிறது மத்திய அரசு.
எனவே தமிழ்நாட்டில் இருந்தவாறு ரயில் மறியல், சாலை மறியல், ஆர்ப்பாட்டம், முற்றுகை போன்ற போராட்டங்களில் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக ஈடுபட்டு வருகிறோம். விவசாயிகள் போராட்டம் வீரம் செறிந்த போராட்டமாகும். இதில் பங்கேற்பதிலும் உரையாற்றுவதிலும் மிகுந்த பெருமை கொள்கிறோம்.” இவ்வாறு அவர் பேசினார்.