சிம்லா: குளுகுளு மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் அனல் பறக்கும் அரசியல் நகர்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. இன்று (பிப்.29) காலையில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 6 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த நிலையில், முதல்வருக்கு எதிராக மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
மாநில காங்கிரஸ் தலைவரும் இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்திர சிங் மனைவியுமான பிரதிபா சிங் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மாநிலங்களவைத் தேர்தலில் அந்த 6 எம்எல்ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்தனர். அவர்கள் வருத்தத்தில் இருந்தனர். ஏன் அவர்களுக்கு வருத்தம் இருக்காது என சிந்திக்க வேண்டும்.
ஓராண்டுக்கும் மேலாகியும் அவர்கள் குரல்களுக்கு செவிசாயக்கப்படவில்லை. அவர்களை என்றேனும் அழைத்து மேலிடம் பேசியிருக்கிறதா? அவர்களிடம் பேசி பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருந்தால் இந்த நிலைமையே ஏற்பட்டிருக்காது.
நாங்கள் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு இமாச்சலப் பிரதேச மக்கள் உடன்படுவார்கள். அவர்களுக்கு வீரபத்திர சிங்கின் பெருமை தெரியும். வீரபத்திர சிங் கனவை நோக்கி தான் நாங்கள் பயணிக்கிறோம். நாங்கள் பலமுறை கட்சி மேலிடத்தில் பேசியிருக்கிறோம். ஆனால், எங்களின் கோரிக்கைகளுக்கு எந்தப் பதிலும் இல்லை. எனது மகன் விக்ரமாதித்ய சிங் தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்கிறார்” என்றார்.
முன்னதாக, நேற்று விக்ரமாதித்ய சிங் அளித்தப் பேட்டியில், “நான் ராஜினாமா குறித்து மேலிடத்துக்கு அழுத்தம் தரப்போவதில்லை. பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. கட்சி மேலிடப் பார்வையாளர்கள் வந்துள்ளனர். நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இமாச்சலப் பிரதேசம் ஒரு தேவ பூமி. நான் அயோத்தி சென்று ராமர் ஆசி பெற்றுவந்தேன். எங்களுக்கு எல்லோரது ஆசியும் இருக்கிறது. எந்தப் பிரச்சினையும் இல்லை” எனக் கூறியிருந்தார்.
ராஜினாமா குறித்து சூசகப் பேச்சுக்களால் காங்கிரஸ் அரசை அழுத்ததிலேயே வைத்திருக்கிறார். இத்தகைய சூழலில் அவரது தாயாரும், மாநில காங்கிரஸ் தலைவருமான பிரதிபா சிங்கின் பேட்டி மேலும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. முன்னதாக இன்று காலை முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார் என்பது கவனிக்கத்தக்கது.
அரசியல் சலசலப்பும் பின்னணியும்: இமாச்சல பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு காங்கிரஸைச் சேர்ந்த 6 எம்எல்ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்தனர். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜிந்தர் ராணா, ரவி தாக்கூர் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, பாஜக ஆளும் ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் உள்ள தேவிலால் மைதானத்தில் இருந்து அந்த 6 எம்எல்ஏ.க்களும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை காலை சிம்லாவுக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டதாக ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல்வர் சுக்விந்தர் சிங் மீது காங்கிரஸ் எம்எல்ஏ.க்களில் பலர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவர்கள் பாஜகவுடன் நெருக்கம்காட்டி வருகின்றனர். இமாச்சல அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நடத்த பாஜக கோரியுள்ளது. மாநிலங்களவை தேர்தலில் ஒரே ஒரு மாநிலங்களவை தொகுதியில் பாஜக தனது வேட்பாளரை வெற்றி பெறச் செய்த 24 மணி நேரத்தில் பாஜக இந்த கோரிக்கையை விடுத்தது.
இமாச்சல சட்டப் பேரவையில் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லை. எனவே, சட்டப்பேரவையில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி எதிர்கட்சித் தலைவர் மற்றும்பாஜக எம்எல்ஏ.க்கள், ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லாவை சந்தித்து வலியுறுத்தினர்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர் கூறுகையில், “மாநிலங்களவை தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருந்த போதிலும் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது, காங்கிரஸ் அரசு ஆட்சியில் நீடிக்கும் உரிமையை இழந்துவிட்டது” என்றார்.
இந்தச் சூழ்நிலையில், இமாச்சல முதல்வர் சுக்விந்தர் ராஜிநாமா செய்யப் போவதாக தகவல் வெளியான நிலையில், அது தவறான செய்தி என அவர் மறுப்பு தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் அரசு இமாச்சலில் 5 ஆண்டு ஆட்சியை முழுவதுமாக நிறைவு செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழாமல் இருக்க டெல்லி மேலிடம் ஒரு குழுவை அனுப்பி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.