கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதியின் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ சத்யா. இவரின் கணவர் பன்னீர்செல்வம், 2011-16 ஆண்டுகளில் பண்ருட்டி நகராட்சியின் சேர்மனாக இருந்தவர். அப்போது பண்ருட்டி பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த நகராட்சிக்குச் சொந்தமான இடம், வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்காக ஏலம் விடப்பட்டது. அதில் சுமார் 20 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக, பன்னீர்செல்வம் மற்றும் அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் ஆகியோர்மீது லஞ்ச ஒழிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவுசெய்தனர்.

அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 6:30 மணியளவில் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி தேவநாதன் தலைமையிலான போலீஸார், பண்ருட்டி காமராஜர் நகரில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அதேநேரத்தில் சென்னை பெரம்பூர் ஜவஹர் நகரில் வசித்துவரும், முன்னாள் நகாராட்சி கமிஷனர் பெருமாள் வீட்டிலும் நுழைந்து சோதனை செய்தனர். அதேபோல பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான பண்ருட்டியைச் சேர்ந்த அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் பெருமாள், பத்திர எழுத்தர் செந்தில்முருகன், திருவதிகை பிரசன்னா (எ) சம்பத்ராஜ், சத்தியமூர்த்தி தெருவில் வசிக்கும் மோகன்பாபு உள்ளிட்டவர்களின் வீடுகளிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.
நேற்று இரவு வரை நடைபெற்ற சோதனைகளுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், “முறைகேடு தொடர்பான ஆவணங்கள், நிலங்கள் மற்றும் சொத்துகள் தொடர்பான 47 ஆவணங்களை கைப்பற்றியிருக்கிறோம். அவற்றின் மதிப்பு ரூ.15,64,32,237 கோடி” என்றனர். பன்னீர்செல்வத்தின் வீட்டில் ரெய்டு நடந்த தகவல் கேட்டு, சிதம்பரம் தொகுதியின் எம்.எல்.ஏ-வும், கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான பாண்டியன், புவனகிரி தொகுதியின் எம்.எல்.ஏ-வும், கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான அருண்மொழிதேவனும் அங்கு சென்றனர். ஆனால் அவர்களை போலீஸார் அனுமதிக்கவில்லை.

இந்த ரெய்டு குறித்து, “கடலூர் மாவட்டம் பண்ருட்டி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் அவர்கள் மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்துடன் லஞ்ச ஒழிப்பு துறையை ஏவி விட்டிருக்கும் விடியா தி.மு.க அரசின் செயலுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருக்கிறார்.