மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளையும் ஒதுக்கீடு செய்திருக்கிறது திமுக. திமுக கூட்டணியில் இந்த இரு கட்சிகளும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து விவரங்கள் இனி பேச்சுவார்த்தை மூலம் முடிவு எடுக்கப்படும் என இரு கட்சித் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
சிபிஐ, சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் இன்று திமுகவுடன் தொகுதிப் பங்கிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலைப் போல், இரு கட்சிகளுக்கும் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “இரண்டு தொகுதிகள் திமுக ஒதுக்கி இருக்கிறது. 40 தொகுதிகளும் எங்கள் தொகுதி என கருதி தேர்தல் பணிகளில் ஈடுபடுவோம்” எனக் கூறினார்.
சிபிஎம் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “மூன்று தொகுதிகளை ஒதுக்கக் கோரிக்கை முன்வைத்திருந்தோம். ஆனால், கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கைகள் கருத்தில் கொண்டு இரு தொகுதிகளுக்கு உடன்பட்டிருக்கிறோம். சென்றமுறை வென்ற தொகுதிகளைத்தான் ஒதுக்கச் சொல்லி கோரிக்கை முன் வைக்கிறோம்.
ஆனால், மற்ற கூட்டணி கட்சிகள் அந்த இடங்களைக் கேட்பதால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுதான் ஒதுக்கப்படும். குறிப்பாக, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் கூட்டணியில் இணைய இருக்கிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு விரைவில் எந்தத் தொகுதியில் சிபிஎம் போட்டியிடும் என்பது அறிவிக்கப்படும்” என்றார்.
கோவையில் ‘கமல்’ – கடந்த சில தினங்களாகவே மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்கும் என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதில், தலைவர்கள் மத்தியிலான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. மநீமவுக்கு கோவை தொகுதி ஒதுக்க திமுக திட்டமிட்டு இருப்பதாக தகவல் அடிபட்டன.
கடந்த முறை சிபிஎம் கோவையில் போட்டியிட்டு இருந்தது. தற்போது அந்தத் தொகுதியை மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது.
காங்கிரஸின் ‘11’ கணக்கு! – திமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் தொகுதிப் பங்கீடு உறுதி செய்திருக்கும் நிலையில், பிரதான கூட்டணி கட்சியாக இருக்கும் காங்கிரஸ் இன்னும் தொகுதி எண்ணிக்கையை உறுதிப்படுத்தாமல் இருக்கிறது. குறிப்பாக, முன்னாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அழகிரி இரண்டு இலக்க தொகுதிகள் குறிப்பாக, கடந்த முறை போட்டியிட்ட 10 தொகுதிகளை மீண்டும் ஒதுக்க வலியுறுத்தி இருந்தார்.
புதிய தலைவராக பொறுப்பேற்று இருக்கும் செல்வபெருந்ததை தனித்தொகுதிகளையும் உள்ளடக்கி 15 தொகுதிகளை ஒதுக்க திமுகவிடம் கோரிக்கை வைத்ததாக தகவல் அடிபட்டன. ஆனால், திமுக அதற்கு இசைவு தெரிவிக்கவில்லை. இதனால் செல்வபெருந்ததை காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுனா கார்கேவை சந்திக்க டெல்லிக்குப் பயணித்தார். 11 தொகுதி கணக்குக்கு மல்லிகார்ஜுனா கார்கேவும் ஒப்புக்கொண்டதாக தெரிய வருகிறது.
இந்த நிலையில், திமுகவுடன் தலைவர்கள் மத்தியிலான பேச்சுவார்த்தை நடைபெற்று சுமுகமான முடிவு எடுக்கப்படும் என தகவல் சொல்லப்படுகின்றன. நாளை மறுநாள் ‘திமுக -காங்கிரஸ்’ இடையே பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
செல்வப்பெருந்தகை கணக்கு! – தொகுதியை அதிகரிக்க செல்வப்பெருந்தகை தீவிரம் காட்டி வருகிறார். அவர் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றது முதலே ‘திமுகவுக்கு நெருக்கமானவர்’ என்னும் குற்றச்சாட்டு அவர் மீது முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் கடந்த முறையை விட குறைவான எண்ணிக்கை திமுக ஒதுக்கும் எனத் தகவல் வெளியானது.
எனவே, தன் தலைமை பொறுப்புக்கு வலிமை சேர்க்கவும், திமுகவுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்பதை நிரூபிக்கவும் தீவிரம் காட்டி வருகிறார் செல்வப்பெருந்தகை. அதனால் கூடுதல் தொகுதிகளை ஒதுக்கக் கோரிக்கை வைத்து வருகிறார். ஆனால், இதற்கு பலன் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
விசிக, மதிமுக ‘3’ கணக்கு: அதேபோல், விசிகவும் சென்ற முறை ஒதுக்கிய 2 தொகுதிகளுடன் சேர்த்து 1 தொகுதியைக் கூடுதலாக ஒதுக்கச் சொல்லி கேட்கிறது. மதிமுகவும் 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஒதுக்கக் கோரிக்கை வைக்கிறது. இதனால், பேச்சுவார்த்தையில் இழுபறியும் நீடிக்கிறது. எனவே, இதனால், திமுகவின் தொகுதிக் கணக்கில் சில மாற்றம் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.