ஜூன் மாதம் முதல் அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கையை 24 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பம் கோரல் மார்ச் 15ஆம் திகதியுடன் நிறைவு – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க.

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பித்த பயனாளிகளின் தரவு சரிபார்ப்பு மற்றும் சான்றுபடுத்தல் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அஸ்வெசும பயனாளிகளின் குடும்ப அலகுகளின் எண்ணிக்கையை ஜூன் மாதம் முதல் 24 இலட்சமாக அதிகரிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் 2024 மார்ச் 15 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காதவர்கள் எவரும் அஸ்வெசும பலனைப் பெறத் தகுதி பெற மாட்டார்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

பொய்யான தகவல்களின் மூலம் அஸ்வெசும நன்மைகளைப் பெற்ற சுமார் 7000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர்,

அஸ்வெசும முதல் கட்ட கணக்கெடுப்பில், 34 இலட்சம் குடும்ப அலகுகளின் தகவல்கள் சரிபார்க்கப்பட்டன. இதன்படி 19 இலட்சம் குடும்பங்கள் பயன்பெற தகுதி பெற்றுள்ளன. இதுவரை பெறப்பட்ட மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளின் அடிப்படையில், ஜூலை 2024 முதல் தகுதியானவர்களுக்குப் பணம் செலுத்த நலன்புரி நன்மைகள் சபை தயாராக உள்ளது.

எங்களுக்கு 12,27,000 முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைத்துள்ளன. அவர்களில் சுமார் 11,97,000 பேர்தொடர்பில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கு மேலதிகமாக,அஸ்வெசும உதவிகள் உண்மையிலேயே தகுதியான ஒரு குழுவினருக்கு கிடைக்கவில்லை. முதல்கட்ட விண்ணப்பத்தில் அவர்களுக்கு விண்ணப்பப் படிவங்களை வழங்காததால், அவர்களுக்கு அஸ்வெசும பலன் கிடைக்கவில்லை.

அதன்படி, ஓன்லைன் ஊடாக மேற்கொண்ட பரந்த விழிப்புணர்வுக்குப் பிறகு 200,000 – 250,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளோம். இவ்வாறாக பிரதேச செயலகங்களுக்கு நேரடியாக வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்கள் தற்போது எமது மென்பொருளில் உள்வாங்கப்படுகின்றது. அதன்படி, இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் 2024 மார்ச் 15ஆம் திகதியுடன் நிறைவடையும்.விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்காத எவரும்அஸ்வெசும பலன்களைப் பெற தகுதி பெறமாட்டார்கள் என்பதை வலியுறுத்த வேண்டும்.

மேலும், புதிய விண்ணப்பதாரர்களின் தரவு சரிபார்ப்பு மற்றும் சான்றுப்படுத்தல் என்பன நிறைவடைந்த பிறகு, 2024 ஜூன் முதல் 24 இலட்சம் குடும்ப அலகுகளுக்கு அஸ்வெசும பலன்கள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும தொகைக்காக 205 பில்லியன் ரூபாவை செலவிட எதிர்பார்க்கிறோம். அதனுடைய ஒதுக்கீடுகள் தற்போது முடிவடைந்துள்ளது.

மேலும், இதுவரை கிடைத்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளையடுத்து சுமார் 7,000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தவறான தகவல்களை அளித்து நன்மைகளை அடைந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான நபர்கள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளோம். அவர்களிடமிருந்து பணத்தை மீளப்பெறவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறோம் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.