புதுடெல்லி: “மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மக்கள், மத்தியில் பாஜக அரசை அகற்றுவார்கள். தேர்தலுக்கு முன் சம்மன்கள் அனுப்பப்படுகிறது. சிபிஐ ‘பாஜகவின் செல்’ போல செயல்படுகிறது” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் காட்டமாக தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு சிபிஐ நேற்று சம்மன் அனுப்பியிருந்தது. அந்த சம்மனில் சட்ட விரோதமாக சுரங்கங்களை ஒதுக்கிய வழக்கு தொடர்பாக விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அகிலேஷ் யாதவ் டெல்லி சென்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வாய்ப்பு இல்லை என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து, அகிலேஷ் யாதவ் இன்று பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினர் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிலையில், அகிலேஷ் யாதவ் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மக்கள், மத்தியில் பாஜக அரசை அகற்றுவார்கள். பாஜக ஆட்சியில், பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. சட்டம் – ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. தற்போதைய ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனக்கு கிடைத்த சம்மனுக்கு (paper) நான் பதில் அளித்துள்ளேன். தேர்தலுக்கு முன் சம்மன்கள் அனுப்பப்படுகின்றன. சிபிஐ ‘பாஜகவின் செல்’ போல செயல்படுகிறது” என்றார்.