உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நடிகை ஜெயப்பிரதா, பாஜகவில் இணைந்து 2019-ல் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். சமாஜ்வாதி வேட்பாளர் ஆசம் கானிடம் தோல்வி அடைந்தார். அப்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஜெயப்ரதா மீது கெமாரி மற்றும் ஸ்வார் ஆகிய 2 காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராம்பூரில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் பல முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து, பிணையில் வெளியில் வரமுடியாத கைது வாரன்ட் 7 முறை பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் போலீஸாரால் ஜெயப்ரதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியவில்லை. ஜெயப்ரதாவின் செல்போன் எண்கள் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கைது நடவடிக்கையை தவிர்த்து வருகிறார் என்றும் நீதிமன்றத்தில் போலீஸார் தெரிவித்தனர்.
இந்த மனு நீதிபதி ஷோபித் பன்சால் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயப்ரதாவை தேடப்படும் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். அத்துடன் அவரை கைது செய்து வரும் மார்ச் 6-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ராம்பூர் மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட்டார்.