சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரும், சென்னையில் உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்த, கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பவித்ராவும் காதலர்கள். இருவரும் கடந்த 24-ம் தேதி இரவு, கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலையை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர். அதிகாலை சுமார் 3 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்திருக்கும் கோனேரிக் குப்பத்தை தாண்டி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் அவர்களை பின் தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள், ரமேஷ் – பவித்ராவிடம் இருந்த செல்போனையும், பணத்தையும் பறித்துக் கொண்டனர். அத்துடன் ரமேஷை கடுமையாக தாக்கி, பவித்ராவை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர். அப்போது அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையில் ஓடிய அப்பெண், சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, மோதியலில் தூக்கி வீசப்பட்டார்.
அத்துடன் காரில் இருந்த கொடிக்கம்பம் அப்பெண்ணின் முகத்தை கிழித்தது. இதனால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார் பவித்ரா. அதையடுத்து ரமேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த ஒலக்கூர் போலீஸார், அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராக்கள் மூலம், விபத்து ஏற்படுத்திய கார் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை செய்து வந்தனர். அதனடிப்படையில் விபத்து ஏற்படுத்திய சென்னை முடிச்சூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரை பிடித்த போலீஸார், அவரிடமிருந்து மாருதி எர்டிகா காரை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையில் விபத்தில் உயிரிழந்த பவித்ரா உடல், உடற்கூராய்வுக்குப் பின் 25-ம் தேதி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து வழிப்பறி செய்த மர்ம நபர்களை, சி.சி.டி.வி காட்சிகள் மூலம் தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். அதையடுத்து, வழிப்பறி செய்து, பவித்ராவை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற திருநெல்வேலி மாவட்டம் கொள்ளியங்குளம் பகுதியைச் சேர்ந்த உதயபிரகாஷ் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
அவருடன் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்ட மற்றொரு நபரான பணகுடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பவித்ராவிடம் பறித்த செல்போனை விக்கிரவாண்டிக்கு அடுத்திருக்கும் கப்பியாம்புலியூர் ஏரிக்கரையில் புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார் உதயபிரகாஷ்.
அதனடிப்படையில் ஒலக்கூர் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், சிறப்பு காவல் உதவி சப் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், தலைமைக் காவலர் தீபக் குமார் உள்ளிட்டவர்கள், உதயபிரகாஷை கப்பியாம்புலியூர் ஏரைக்கரைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது புதரில் வைத்திருந்த செல்போனை எடுத்த உதயபிரகாஷ், அதனுடன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சிறப்பு காவல் உதவி சப் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், தலைமைக் காவலர் தீபக் குமார் இருவரையும் வெட்ட ஆரம்பித்தார்.
அதில் இருவருக்கும் கைகளில் பலத்த காயம் ஏற்பட, சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தார். ஆனால் உதயபிரகாஷ் அங்கிருந்த புதரில் குதித்து தப்பியோட முயன்றார். அப்போது உதயபிரகாஷை நோக்கி துப்பாக்கியால் இரண்டு ரவுண்டுகள் சுட்டார் மகாலிங்கம். அதில் ஒரு குண்டு உதயபிரகாஷின் முழங்காலில் பட்டது.
அதில் நிலை தடுமாறி விழுந்த உதயபிரகாஷ் உள்ளிட்ட காயமடைந்த போலீஸார், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட உதயபிரகாஷ் மீது திருநெல்வேலி ராதாபுரம் காவல் நிலையத்தில், கொலை மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. வேறொரு வழிப்பறி வழக்கில் கைதாகி சிறுவனும், உதயபிரகாஷும் நீதிமன்றத்தில் நண்பர்களாகியிருக்கின்றனர் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY