'மஞ்சும்மேல் பாய்ஸ்' குழுவினரைப் பாராட்டிய கமல்ஹாசன், உதயநிதி

சிதம்பரம் இயக்கத்தில், சவுபின் ஷாகிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி, லால் ஜுனியர், தீபக் பரம்போல், அபிராம் ராதாகிருஷ்ணன், அருண் குரியன், கலித் ரகுமான் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்தவாரம் மலையாளத்தில் வெளிவந்த படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'.

சந்தான பாரதி இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கமல்ஹாசன், ரோஷினி நடிப்பில் 1991ல் வெளிவந்த 'குணா' படத்தில் இடம் பெற்ற 'டெவில்ஸ் கிச்சன்' என்றழைக்கப்பட்ட குகை தான் இந்த மலையாளப் படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது. அந்த இடத்தில் 'குணா' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று பிரபலமானதால் தற்போது 'குணா குகை' என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

கொச்சியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறார்கள், சில நண்பர்கள். அங்கு ஒரு நண்பர் 'குணா குகை' பற்றி சொல்ல அங்கு போய் பார்க்கிறார்கள். அவர்களில் ஒருவர் அந்த குகையின் ஆழமான பகுதியில் விழுந்து விடுகிறார். அவரை மற்ற நண்பர்கள் காப்பாற்றினார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

'குணா' படத்தில் இடம் பெற்ற 'கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே..' பாடல் இந்த மலையாளப் படத்தில் உணர்வுபூர்வமான விதத்தில் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளது. தற்போது தமிழ் ரசிகர்களிடமும் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நிவின்பாலி, சாய் பல்லவி நடித்து வெளிவந்த 'பிரேமம்' படத்திற்குப் பிறகு தமிழ் ரசிகர்களும் இந்தப் படத்தைக் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் படக்குழுவினர் நேற்று 'குணா' படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான கமல்ஹாசனை சந்தித்துப் பேசினர். அவரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என படக்குழுவினர் தெரிவித்தனர்.

முன்னாள் நடிகரும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதியும் படக்குழுவினர் சந்தித்தனர். அவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து, “மலையாளத்தில் சமீபத்தில் வெளியான #ManjummelBoys திரைப்படம் பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், அத்திரைப்படக் குழுவினரை இன்று நேரில் சந்தித்தோம். நாம் அப்படத்தை பாராட்டியதற்காக அவர்கள் நன்றி தெரிவித்து அன்பை வெளிப்படுத்தினர்.

ஒளிப்பதிவு, பின்னணி இசை, திரைக்கதை, காட்சி அமைப்பு என அனைத்து வகையிலும் தரமான படைப்பாக #ManjummelBoys – ஐ தந்த படக்குழுவுக்கு என் வாழ்த்துகள்,” என்று பாராட்டியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.