ரசிகரின் வேண்டுகோளை ஏற்று கேரளா வரச் சொன்ன ‛மின்னல் முரளி' இயக்குனர்
மலையாள திரை உலகில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சூப்பர்மேன் கதையம்சம் கொண்ட 'மின்னல் முரளி' என்கிற படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் இருவரும் சூப்பர்மேன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் பசில் ஜோசப் இயக்கியிருந்தார். இதற்கு முன்பு அவர் இரண்டு படங்களை இயக்கி இருந்தாலும் இந்த படத்தின் மூலம் இன்னும் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். மேலும் ஒரு பிசியான நடிகராகவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ரசிகர், “நான் இங்கே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். சொந்த ஊருக்கு (கேரளா) வந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. என்னுடைய இந்த வீடியோவை பார்த்துவிட்டு இதில் இயக்குனர் பசில் ஜோசப் ஒரு கமெண்ட் பதிவிட்டால் நான் உடனடியாக ஊருக்கு வர டிக்கெட் புக் செய்வேன்” என்று கூறியுள்ளார்.
இது பசில் ஜோசப்பின் கவனத்திற்கு சென்றதும், “திரும்பி வா மகனே” என அதில் தனது கமெண்ட்டை பதிவிட்டுள்ளார். இவர் இப்படி கமெண்ட் வெளியிட்டதைத் தொடர்ந்து அந்த வீடியோவின் கீழ் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் தங்களது கமெண்ட்டுகளை பதிவிட்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக சில நாட்களுக்கு முன்பு ஒரு மாணவர் நடிகர் டொவினோ தாமஸிடம், “நீங்கள் என்னுடைய பதிவில் கமெண்ட் இட்டால் நான் படிக்கத் துவங்குவேன்” என்று கூறியிருந்தார். “போய் படி மகனே” என்று அதற்கு பதில் அளித்து இருந்தார் டொவினோ தாமஸ்.
அதேபோல சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிடமும் சில மாணவர்கள் ஒன்றாக வீடியோ வெளியிட்டு, எங்களது வீடியோவிற்கு நீங்கள் கமெண்ட் செய்தால் நாங்கள் நிறைய மதிப்பெண்கள் வாங்குவதற்கு படிக்க துவங்குவோம் என்று கூறியிருந்தனர். அவரும் பதிலுக்கு, “நன்றாக படியுங்கள்.. என்னை நேரிலேயே சந்திக்கலாம்” என்று உற்சாகப்படுத்தி பதில் கூறியிருந்தார்.
இதுபோன்று தங்களது அபிமான நடிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ரசிகர்கள் பலரும் இப்படி வித்தியாசமாக யோசித்து களத்தில் இறங்கி உள்ளனர்.