முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ் உள்ளிட்டோர் 2022-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால், சிறையிலிருந்த விடுதலை செய்யப்பட்டனர்.

உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட அவர்கள், தங்களின் தாய் நாடான இலங்கைக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்பினர். திருச்சியிலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்ட அவர்கள், தாய் நாடு திரும்புவது தொடர்பாக, மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் கோரிக்கை வைத்துவந்தனர்.
அகதிகள் சிறப்பு முகாமில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், நடைப்பயிற்சி செய்ய முடியவில்லை என்றும் சாந்தன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சாந்தன் உயிரிழந்திருக்கிறார். சாந்தனின் மரணச் செய்தி, இலங்கையிலுள்ள அவருடைய தாய் உள்ளிட்ட உறவினர்களையும், ஈழ ஆதரவாளர்களையும், பல்வேறு அரசியல் கட்சியினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் சாந்தனின் தாயார், தன் மகனை இலங்கைக்கு அழைத்துவருவது தொடர்பாக இந்திய, இலங்கை அரசுகளுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை வைத்துவந்தார். இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் முயற்சிகள் மேற்கொண்டுவந்தனர்.
இவர்களை இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் ஸ்ரீதரன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், ‘உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிறகும், இலங்கை குடிமக்களான சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை இலங்கைக்கு அழைத்துவர எடுக்கப்பட்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் அவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். 77 வயதாகும் சாந்தனின் தாயார், தன் மகனை 33 ஆண்டுகளாகப் பார்க்கவில்லை என்ற வேதனையில் இருக்கிறார்’ என்று சிவஞானம் ஸ்ரீதரன் குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சாந்தனின் தாயார் உள்ளிட்ட உறவினர்களைச் சந்தித்து, சாந்தனை இலங்கைக்கு அழைத்துவருவது தொடர்பாக முறையிட்டனர். அதைத் தொடர்ந்து, இரு நாட்டுத் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் பேசியிருக்கிறார். இப்படியாக, கடும் முயற்சிகள் மேற்கொண்டும், எதுவும் பலன் தராத நிலையில்தான், சாந்தன் மரணம் நிகழ்ந்திருக்கிறது.

தற்போது, முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய மூவரையுமாவது அவர்களின் தாய்நாடான இலங்கைக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. இதே கோரிக்கையை, சாந்தன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த பல தலைவர்களும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், ‘உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிறகும், சிறப்பு முகாம் என்ற பெயரில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத ஒரு வதைக்கூடத்தில் இவர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டு, கடுமையான மனஉளைச்சலுக்கும், உடல் பாதிப்புகளுக்கும் ஆளாகிய நிலையில், தங்கள் தாயகத்துக்குத் திரும்ப வேண்டுமென்று சாந்தன் தொடர்ந்து மன்றாடினார். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், அவர் தாய்நாட்டுக்கு அனுப்பப்படவில்லை என்பது வேதனைக்குரியது’ என்று கூறியிருக்கிறார்.

மேலும், ‘பேரறிளவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தமிழகத்தில் தங்கள் குடும்பத்தினருடன் வசிக்கிறார்கள். அவர்களால் சட்டம் ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதேபோல, முருகனும், ராபர்ட் பயஸும், ஜெயக்குமாரும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்குக்கோ, இந்திய தேசத்தின் பாதுகாப்புக்கோ, எந்த பாதிப்பும் ஏற்படுத்துபவர்கள் அல்ல.
உச்ச நீதிமன்றமே இவர்களை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கிய பிறகும், சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகும், வெளியுறவு நலன் கருதி, தேசத்தின் நலன் கருதி, சிறப்பு முகாமில் அவர்களை அடைத்துவைப்பது சட்டத்துக்கும், இயற்கை நியதிக்கும் எதிரானது. எனவே, தற்போது சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை அவர்கள் விரும்புகிற பகுதிகளில் வசிப்பதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்’ என்றும் திருமாவளவன் வலியுறுத்தியிருக்கிறார்.
முருகன் உள்ளிட்ட மூவரும் இலங்கை செல்ல வேண்டுமென்றால், இந்திய அரசு, இலங்கை அரசு என இரு அரசுகளின் அனுமதியும் தேவை என்ற நிலை இருக்கிறது. சாந்தனை இலங்கைக்கு அழைத்துவருவதற்கான முயற்சியில் ஈடுபட்ட இலங்கை எம்.பி-யான சிவஞானம் ஸ்ரீதரன், ‘இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி கிடைத்தால், சாந்தனை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க முடியும் என்று இந்திய அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர்’ என்று கூறியிருக்கிறார்.

‘இலங்கையில் இருக்கும் என் வயதான தாயை கவனித்துக்கொள்ள வேண்டும். எனவே, என்னை இலங்கைக்கு அனுப்பிவைக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில்தான், சாந்தன் உயிரிழந்தார்.
அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, ‘சாந்தனை இலங்கை அனுப்பவதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் துரதிஷ்டவசமாக அவர் உயிரிழந்துவிட்டார்’ என்று அரசு சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.

அதற்கு, ‘சாந்தனை இலங்கை அனுப்புவதற்கான அனுமதி எப்போது கிடைத்தது’ என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அதற்கு, `பிப்ரவரி 22-ம் தேதி அவரை இலங்கை அனுப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், உடல்நிலை பாதிக்கப்பட்டு ஜனவரி 24-ம் தேதியிலிருந்தே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அவரால் நகரக்கூட முடியவில்லை’ என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை உடனடியாக இலங்கைக்கு அனுப்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவருகிறார்கள்.