இந்திய அணியின் அடுத்த நட்சத்திரமாக பார்க்கப்பட்ட இஷான் கிஷனுக்கு இப்போது நேரம் சரியில்லை. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் மீது தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அத்தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் இஷான். அப்போது இருந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பிரச்சனை தொடங்கியது. இந்திய அணிக்காக விளையாடாத பிளேயர்கள் உடனடியாக ரஞ்சி கோப்பைகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியதை இஷான் கிஷன் கண்டு கொள்ளவே இல்லை. மாறாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட தொடங்கினார்.
பயிற்சியாளர் டிராவிட் மற்றும் இந்திய அணியின் தேர்வுக்குழு சொல்லியும் கேட்காத இஷான் கிஷன் விஷயம் நேரடியாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிடம் எடுத்துச் செல்லப்பட்டது. அவரும் தேசிய அணிக்காக கிரிக்கெட் விளையாடாத பிளேயர்கள் தாங்கள் சம்பந்தப்பட்டிருக்கும் மாநில அணிகளுக்கான ரஞ்சி போட்டியில் ஆட வேண்டும் என அறிவுறுத்தினார். இல்லையென்றால் அந்த பிளேயர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். இஷான் கிஷனை மனதில் வைத்துக் கொண்டு தான் அவரும் இந்த எச்சரிக்கையை விடுத்தார். ஆனால், ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் மீது இருந்த அதிருப்தியால் ஜெய்ஷா உத்தரவுக்கும் அவர் செவிசாய்க்கவில்லை.
இது இந்திய அணி நிர்வாக பிரச்சனையாக மாறிவிட்டதால் இஷன் கிஷன் மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என மாநில கிரிக்கெட் சங்கங்களும் பிசிசிஐக்கு அறிவுறுத்தின. இதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான பிசிசிஐ சம்பள ஒப்பந்தப் பட்டியலில் இருந்து இஷான் கிஷன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஜெய் ஷா உத்தரவுக்கே கீழ் பணியாத அவர் மீது பிசிசிஐ இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறது. ரோகித் சர்மா மீது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஷான் கிஷன் நடந்து கொண்டதால் இப்படியான கடுமையான தண்டனையில் சிக்கியுள்ளார்.
இதனால் அவரின் இந்திய அணிக்கான சர்வதேச கிரிக்கெட் பயணம் கேள்விக்குறியாகியுள்ளது. பிசிசிஐ உத்தரவை மதிக்காத பிளேயர்களை ஐபிஎல் போட்டிகளிலும் பரிசீலிக்க வேண்டாம் என்ற வலியுறுத்தல்களும் எழுந்திருப்பதால் இஷான் கிஷனின் ஐபிஎல் விளையாட்டும் கேள்விக்குறியில் இருக்கிறது. இருப்பினும் பிசிசிஐ இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இந்த சம்பவங்களால் செம கடுப்பில் இருக்கும் இஷான் கிஷன், மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவுடன் எப்படி இணைந்து விளையாட போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஹர்திக் பாண்டியாவுக்கும் ரோகித்துக்கும் இடையே மோதல் இருப்பதால், இஷான் கிஷன் இப்போது ஹர்திக் பாண்டியா அணிக்கு தாவியுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் ஒரே வேவ் லென்தில் இருப்பதால் ரோகித் சர்மாவுக்கு தான் ஐபிஎல் போட்டியின்போது தலைவலி காத்திருக்கிறது எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. ரோகித் சர்மா ஒழுங்காக பேட்டிங் விளையாடவில்லை என்றால், மும்பை அணியின் பிளேயிங் லெவனில் இருந்தே தூக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மும்பையின் பயிற்சியாளர் மார்க் பவுச்சரும் இதை சூசகமாக அண்மையில் தெரிவித்தார்.
அதாவது, கேப்டன் பொறுப்பு இருப்பதால் ரோகித் பேட்டிங் பாதிக்கப்படுகிறது, அதனால் அந்த அழுத்தம் இல்லாமல் அவர் சிறப்பாக ஆட்டடும் என கூறியிருந்தார் அவர். ஒருவேளை பேட்டிங் நன்றாக ஆடினால் மட்டுமே மும்பை அணியில் இடம், இல்லையென்றால் ரோகித் சர்மா வெளியே உட்கார வைக்கப்படுவார் என்பதை தான் பவுர்ச்சர் இப்படி தெரிவித்திருக்கிறார். அதனால், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா இருக்கும் மோதல்களை ஐபிஎல் போட்டியின்போது எப்படி ரோகித் சமாளிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு மும்பை ரசிகர்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்குமே இருக்கிறது.