புதுடெல்லி: வியாஸ் மண்டபம் சர்ச்சை தொடர்பாக வாரணாசி செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்து தரப்பு மேலும் ஒரு மனு அளித்துள்ளது. அந்த மனுவில், மசூதி வளாகத்திலுள்ள மண்டபத்தின் கூரைப்பகுதியை முஸ்லிம்கள் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் வாரணாசியின் காசி விஸ்வநாதர் கோயில் பழம்பெருமை வாய்ந்தது. இதை ஒட்டி கியான்வாபி மசூதி அமைந்துள்ளது. 1664 இல் அவுரங்கசீப் ஆட்சியில் இக்கோயிலின் ஒரு பகுதியை இடித்துக் கட்டப்பட்டதாகப் புகார் உள்ளது.
இம்மசூதியினுள் உள்ள ஒசுகானாவின் ஒரு ஓரத்தின் கீழ் சிறிய அடித்தளம் உள்ளது. வியாஸ் மண்டபம் என்றழைக்கப்படும் இங்கு 1993 இல் நிறுத்தப்பட்ட பூசை தொடர அனுமதி கிடைத்திருந்தது.
இதற்காக வியாஸ் குடும்பத்தின் சைலேந்தர் குமார் பாதக் வாரணாசி மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு அளித்திருந்தார். இது ஏற்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டதுடன் அதற்கு அலகபாத் உயர் நீதிமன்றத்தில் தடை கேட்ட மசூதி நிர்வாகத்தின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன் காரணமாக வியாஸ் மண்டபத்தில் தற்போது எந்த தடையும் இன்றி பூஜைகள் தொடர்கின்றன. இச்சூழலில், வாரணாசி செஷன்ஸ் சிவில் நீதிமன்றத்தில் இந்துக்கள் தரப்பில் மேலும் ஒரு மனு நேற்று தொடுக்கப்பட்டுள்ளது.
இதை அளித்த டாக்டர்.ராம் பிரசாத்சிங் என்பவர், வியாஸ் மண்டபத்தின் மேல்கூரை அமைந்த மசூதி பகுதியில் எந்த நடவடிக்கைகளுக்கும் அனுமதிக்கக் கூடாது எனக் கேட்டிருக்கிறார்.
சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த கூரையானது மிகவும் பாழடைந்திருப்பதால், அங்கு தொழுகை நடத்தவும் தடை விதிக்கக் கோரியுள்ளார். இந்த மனு, மார்ச் 19 இல் விசாரிக்கப்பட உள்ளது.
கியான்வாபியில் மேலும் களஆய்வு: இந்நிலையில், சிங்காரக் கவுரி அம்மன் வழக்கின் மனுதாரர்களான ராக்கிசிங் சார்பிலும் நேற்று ஒரு கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாரணாசி மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் தாக்கலான மனுவில், கியான்வாபி மசூதி வளாகத்தில் மீதம் உள்ள எட்டு அடித்தளப் பகுதிகளிலும் களஆய்வு நடத்தும்படி கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கும் மார்ச் 19 ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ளது. ஏற்கெனவே, இந்திய தொல்லியல் ஆய்வகத்தால் மசூதியின் வளாகப்பகுதியில் களஆய்வு நடத்தப்பட்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு: இதனிடையே, வியாஸ் மண்டபத்தின் பூஜைக்கு தடை கேட்ட மசூதி நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமிய கமிட்டியின் மனு அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தது. இதனால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்புகள் உள்ளன.
இதன் மீதும் இந்து தரப்பு உச்ச நீதிமன்றத்தில் ஒரு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்து தரப்பிலான அம்மனுவில், வியாஸ் மண்டபம் மீதான எந்த இரு மனு விசாரணையில் தம்மையும் விசாரித்த பின்பே முடிவு எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.