தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸூக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் அதன் பிறகு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை. திமுக கூட்டணியில் காங்கிரஸூக்கு 8 தொகுதிகள் தருவதாகவும், அதில் ஒரு தொகுதியை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு வழங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிட்டு, 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த தேர்தலில் தமிழகத்தில் மட்டும் 12 இடங்களாவது கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவசரப் பயண மாக கடந்த திங்கள்கிழமை, கட்சி தலைமை அழைப்பின் பேரில் டெல்லி புறப்பட்டு சென்றார். உடன் கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகர், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோரும் சென்றனர்.
அங்கு கட்சியின்மேலிட பொறுப்பாளர்கள் அஜோய்குமார், சிரிவெல்லபிரசாத், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோருடன் கலந்தாலோசனை செய்தனர். இறுதியாக கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்த டெல்லி பயணத்தின்போது, தொகுதிகளை குறைத்து, குறைத்தே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை இல்லாமல் செய்துவிட்டீர்கள். இந்த தேர்தலில் தமிழகத்தில் 10-க்கும் குறையாமல் தொகுதிகளை பெற வேண்டும் என்று கட்சித் தலைமை அறிவுறுத்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனிடையே டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு செல்வப்பெருந்தகை நேற்று சென்னை திரும்பிய நிலையில், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:டெல்லி பயணத்தில் கட்சியின் கட்டமைப்பு, தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக கலந்தாய்வு செய்யப்பட்டது. இது ஏற்கெனவே முடிவு செய்த கூட்டம்.
முதல்வர் ஸ்டாலினும், ராகுல் காந்தியும் உடன்பிறவா சகோதரர்கள் போல் நட்பு வைத்துள்ளனர். திமுக -காங்கிரஸ் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. 2019 மக்களவைத் தேர்தலில், இறுதியில் தான் கூட்டணி கையெழுத்து போடப்பட்டது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
பேச்சுவார்த்தை சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை குறித்து தகவல்கள் வெளியாகும்.
இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது என பிரதமர் கூறியிருப்பது, இந்தியாவை மேன்மையடைய செய்யக் கூடாது என்பதுதான் அர்த்தம். பாஜக ஆள் பிடிக்க பார்க்கிறது. வருமான வரித்துறை போன்ற நண்பர்களையும், சோதனைக்கு அனுப்புவார்கள். இவ்வாறு செய்தால் வருகிறார்களா? என்று காத்திருப்பார்கள். இதெல்லாம் பாஜகவின் வேலை. இவ்வாறு அவர் கூறினார்.