சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’, தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. படத்தில் கமல் நடித்த குணா படத்தைக் கொண்டாடியதைப் போல, மஞ்சும்மல் பாய்ஸ் படமும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் படக்குழு நேற்று தமிழ்நாட்டிற்கு வந்து கமல்ஹாசனையும், குணா படத்தின் இயக்குநர் சந்தான பாரதியையும் சந்தித்திருக்கின்றனர்.
இதையொட்டி 32 ஆண்டுகளுக்கு முன் வெளியான கமலின் ‘குணா’ படத்தின் இயக்குநர் சந்தானபாரதியிடம் பேசினேன்.
”ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் வெளியானதும் படத்தைப் பார்த்துட்டு தனஞ்செயன் சார் போன் பண்ணி பாராட்டினார். அதன்பிறகு அந்த மலையாளப் படத்தை போய் பார்த்தேன். திக்திக்குனு படம் போயிட்டு இருக்கும் போது திடீரென ‘மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல’னு படத்துல பாடலைக் கேட்டதும் தியேட்டர்ல உள்ள மொத்த ஜனங்களும் கைத்தட்டி ரசிச்சாங்க. அந்தக் கைத்தட்டலை கேட்ட கணமே புல்லரிச்சுப் போச்சு. உடம்பெல்லாம் சிலிர்த்திடுச்சு. ‘குணா’ வெளியாகி இத்தனை வருஷத்துக்குப் பிறகு இப்படி ஒரு மாபெரும் வரவேற்பு கிடைச்சிருக்கு. நேத்து ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ டீமோட நானும் கமல் சாரும் சேர்ந்தும் படத்தைப் பார்த்தோம். அவருக்கும் அதே சிலிர்ப்பு. நெகிழ்ந்துட்டார் சார்.
மனநிலை பாதிக்கப்பட்டவர் தன் காதலிக்கு ஒரு கடிதம் எழுதுறார். அதான் சிட்சுவேஷன்னு என்றதும் ‘அன்புள்ள மான்விழியே’ மாதிரியே வானு வாலி சார் கேட்டார், அப்புறம் கமல் சாரே எப்படி இருந்தால் நல்லா இருக்கும்னு சில விஷயங்கள் சொன்னார். பாடல் அப்படித்தான் உருவானது. இந்தப் படத்தின் கதை கொடைக்கானல் பின்னணியில் எடுக்க நினைச்சிட்டோம். நண்பர் கமல் சாரும் நானும் சேர்ந்து கொடைக்கானல்ல ஒரு சர்ச் தான் லொக்கேஷன்னு போய் பார்த்தோம். அதன்பிறகு அங்கேயே எதாவது ஒரு நதி ஓரம் செட் அமைச்சு, படமாக்கலாம்னு நினைச்சோம். அன்னிக்கு மதியமே ஒரு கைடு எங்களை ஒரு இடத்துக்கு அழைச்சுட்டுப் போனார்.
மெயின் ரோட்டுல இருந்து சில கிலோமீட்டர் தூரத்துல அது இருந்தது. அங்கேயே ஆழம் ஆழமா குகைகள் நிறைய இருந்துச்சு. ஆனா, ‘குணா’ குகைதான் ரொம்ப பிடிச்சிருந்தது. ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ல அதே குகையை செட் போட்டும் அப்படியே எடுத்திருக்காங்க. குணா படம் வெளியானப்போ இப்படி போன் கால்கள் வரல. அன்னிக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கல. அந்தக் குறையை எல்லாம் இப்ப போக்குற மாதிரி எல்லாருமே கொண்டாடுறாங்க. பேட்டி வேணும்னு கேட்டு போன்கால்கள் வந்துக்கிட்டே இருக்கு. நண்பர்கள் படம் பார்த்துட்டு பாராட்டுறாங்க. இத்தனை வருஷத்துக்கு பிறகும் கமல் சார் படம் கொண்டாடுறது எங்க எல்லாருக்குமே சந்தோஷமா இருக்கு” நெகிழ்கிறார் சந்தானபாரதி.