ஷிவமொகா : ”எஸ்.சி., – எஸ்.டி., சமுதாயத்திற்கு பா.ஜ., அரசு அதிக மானியம் வழங்கி உள்ளது,” என, பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஷிகாரிபுரா நகரில் தாலுகா எஸ்.சி., – எஸ்.டி., மாநாட்டை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
கர்நாடக வரலாற்றில் எஸ்.டி.,க்களுக்கு முந்தைய பா.ஜ., ஆட்சியில் தான் மிகப்பெரிய மானியம் வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் அம்பேத்கர் பவனுக்கு ஐந்து கோடி ரூபாயும், தாலுகா பவனுக்கு 50 லட்சம் ரூபாயும்; சொரகொண்டானகொப்புக்கு 5 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது.
ராம்நாத் கோவிந்தும், திரவுபதி முர்முவும் பா.ஜ.,வால் ஜனாதிபதி ஆக்கப்பட்டனர். எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினருக்கு உயர்ந்த பதவியை வழங்கியவர் பிரதமர் நரேந்திர மோடி.
இப்பிரிவினர் தொழில் துவங்க வசதி செய்யப்பட்டு உள்ளது. ஷிகாரிபுரா தாலுகாவின் வளர்ச்சி, உங்கள் எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டது. இம்முறை முன்பை விட அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் ராகவேந்திராவை தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பேசியதாவது:
பா.ஜ., ஆட்சியில் எஸ்.சி., – எஸ்.டி., சமூகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் துவங்கப்பட்டு உள்ளன. ராகவேந்திரா தற்போது ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க உள்ளார். அவர் எடியூரப்பாவின் மகன் மட்டுமல்ல. அவரது வளர்ச்சி பணிகளை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
அடுத்த தேர்தலில் குறைந்தபட்சம் மூன்று லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற வேண்டும்.
காங்கிரசுக்கு தேர்தல் வந்தவுடன், அம்பேத்கரின் நினைவுக்கு வருகிறது. தலித் மக்களுக்கு காங்கிரஸ் நீதி வழங்கவில்லை. அம்பேத்கருக்கு காங்கிரஸ் ‘பாரத ரத்னா’ விருது வழங்கவில்லை.
ஆனால் வி.பி.சிங் தலைமையிலான அரசுக்கு பா.ஜ., ஆதரவு அளித்து, அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்க நடவடிக்கை எடுத்தது. ஆனால் தேர்தலில் அம்பேத்கரை காங்கிரஸ் தோற்கடித்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜ.,வின் எஸ்.சி., – எஸ்.டி., மாநாட்டில், தொண்டர்களை பார்த்து வணக்கம் செலுத்திய முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில தலைவர் விஜயேந்திரா. இடம்: ஷிகாரிபுரா, ஷிவமொகா.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்